Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக உருவாகி 75 ஆண்டுகள் நிறைவு கட்சியின் பவளவிழாவை முன்னிட்டு இல்லந்தோறும் திமுக கொடி பறக்கட்டும்: கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் பல்வேறு கட்சிப் பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, திமுகவின் பவள விழாவை முன்னிட்டு கட்சியினர் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் திமுக கொடியை ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் அண்ணாவால் 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டு கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திமுக எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024ம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது. பவளவிழாவையொட்டி திமுக கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் திமுகவுக்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக் கொடி நம் வீடுகள்தோறும் பறந்திட வேண்டும். திமுக கொடி பறக்காத கட்சியினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றிக் கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், ‘பவள விழா நிறைடைவதையொட்டி திமுகவின் கறுப்பு சிவப்புக் கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம்’ என வேண்டுகோள் விடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.