Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுக உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார் பெரியார், அண்ணாவை பழித்தவர்கள் தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார். பெரியார், அண்ணாவை பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி கூறினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பின் கீழ் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.

ஜூலை 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து, முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார். அடுத்த நாள் அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லாம் பேரணியாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடக்கி வைக்க உள்ளனர்.

ஏறத்தாழ 2 கோடி பேரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு முன்வரக்கூடியவர்களை திமுகவில் சேர்க்க வேண்டும்.  திமுகவின் முக்கிய திட்டங்களை விளக்கி, இந்த நான்கு ஆண்டு ஆட்சி சாதனைகளை அவர்களிடம் எடுத்து சொல்லி, டிஜிட்டலாக அவர்கள் ஒரு செயலியின் மூலமாகவும், ஒரு படிவம் மூலமாகவும் அவர்களை இணைக்கக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்லக் கூடிய அளவில் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்கள் நடைபெற இருக்கிறது. தமிழக மக்கள் எப்போதும் எந்த ஒரு அரசியல் சூழ்நிலையிலும் மதங்களையோ, சாதிகளையோ அவற்றுக்கெல்லாம் மாறுபட்டு எப்போதும் ஓரணியில் நின்று அரசியல் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். தமிழ்நாடு எந்த ஒரு சவாலையும் எதிர்க்கொள்கிற போது, அது ஓரணியில் திரண்டு நிற்பதுதான் தமிழ்நாட்டிற்குரிய இயற்கையான பண்புக் கூறு என்பதை மனதில் வைத்து, இந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் வரும் 1ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.

தொடர்ச்சியாக வட மொழிக்கு அவர்கள் அதிக முக்கியத்துவத்தையும் நிதியையும் ஒதுக்கியுள்ளனர். இதனால் வட மொழிக்கு அவர்கள் கொடுக்கும் முன்னுரிமை மீண்டும் உறுதியாகியுள்ளது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் கலைஞர் செம்மொழி அந்தஸ்த்தை உருவாக்கினார். வட மொழிக்கு இருக்க கூடிய முக்கியத்துவத்தை, மற்ற மொழிகள் உள்பட தமிழ் மொழியும் பெற முடியாமல் போயுள்ளதால் தான், தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும் என்று கூறுகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி: ‘உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்வின் மூலம் ஒன்றிய, நகர, பேரூர் திமுகவினுடைய செயலாளர்களை ஒவ்வொருவரையும் தனித் தனியாகச் சந்திப்பேன் என்று 1ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் முதல்வர் அறிவித்தற்கு ஏற்ப கடந்த 13ம் தேதியில் இருந்து இதுவரை 20 தொகுதியின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் ஆகியரோடு தலைவர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் 3 மணி நேரம் உரையாடி வருகின்றார்.

நாங்கள் தெளிவாக எங்களின் அறிக்கையில் சொல்லிவிட்டோம், எங்களை விட பொதுமக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள், தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களையும் இழித்து பேசியதை வேடிக்கை பார்த்ததைத் திமுக மட்டுமில்ல, தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கண்டனத்தை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நீங்களே பார்க்கலாம்.

ஒரு சொல்லும் சரி, ஓர் ஆயிரம் சொல்லும் சரி உணர்ச்சி உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு? இதை பெரிதாக வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இதை புறக்கணித்துவிட்டார்கள். நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் சேர்த்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.