Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Monday, August 11 2025 Epaper LogoEpaper Facebook
Monday, August 11, 2025
search-icon-img
Advertisement

இன்று திமுக பொதுக்குழு மதுரையில் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ: 25 கி.மீ. தூரத்துக்கு மக்கள் திரண்டு நின்று வரவேற்பு, வழிநெடுக மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்

மதுரை: மதுரை உத்தங்குடியில் இன்று காலை நடக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி, மதுரையில் நேற்று 25 கிமீ பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். அப்போது, பொதுமக்கள் திரண்டு வந்து முதல்வரை உற்சாகமாக வரவேற்றனர். மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று பிற்பகல் 1 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.

அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் விமான நிலையம் அருகே தனியார் விடுதிக்கு சென்று முதல்வர் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து மாலை 5.15 மணியளவில் விடுதியில் இருந்து வேனில் புறப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 25 கிமீ ேராடு ஷோ தொடங்கினார். சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்கள் மற்றும் கட்சியினர் திமுக கொடி, குடையுடன் வரிசையாக நின்று வரவேற்றனர்.

பெருங்குடி அடுத்த பர்மா காலனி பகுதிக்கு வந்ததும், வேனில் இருந்து இறங்கிய முதல்வர், நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்ேபாது சாலையோரம் நின்றிருந்த பெண்கள் முதல்வருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். அங்கு வரவேற்க காத்திருந்த குழந்தையை கொஞ்சினார். சுமார் 2 கிமீ தூரம் வரை நடந்து சென்று மக்களை சந்தித்தார். பின்னர் பெருங்குடி, வெள்ளக்கல், அவனியாபுரம், வில்லாபுரம், ெஜயவிலாஸ் பாலம் சந்திப்பு, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், சுந்தர்ராஜபுரம் மார்க்கெட்,

டிவிஎஸ் நகர் புதிய தரைப்பாலம், பழங்காநத்தம், வஉசி மேம்பாலம், பைபாஸ் ரோடு, பொன்மேனி சந்திப்பு, காளவாசல், குரு தியேட்டர் சந்திப்பு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டானா, ஆரப்பாளையம் கிராஸ் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் சிலை, புது ஜெயில் ரோடு சந்திப்பு வரை சுமார் 25 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோவில் பங்கேற்றார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 25 கிமீ ரோடு ஷோ சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோடு ஷோவின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் கை குலுக்கியும், வணக்கம் தெரிவித்தும், கைகளை அசைத்தும், குழந்தைகளை கொஞ்சியும் மகிழ்ந்தார். பொதுமக்களிடம் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மனுக்களும் பெற்றுக் கொண்டார். பொதுமக்கள், மாணவ, மாணவிகள் முதல்வருடன் செல்பி, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று பொதுக்குழு: மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில், திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் கூட்டம் பிற்பகல் 1 மணியளவில் முடிகிறது.

இதில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதலே உறுப்பினர்கள் மதுரைக்கு வந்தவண்ணம் உள்ளனர். நகரெங்கும் திமுக கொடிகள், அலங்காரம் என மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுக்குழுவிற்காக குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலய மாதிரி முகப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான பொதுக்குழு உறுப்பினர்களுடன், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பொதுக்குழு கூட்ட அழைப்பாளர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் போதுமான அளவிற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரான பின் முதன்முறை: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், சென்னைக்கு வெளியே நடத்தப்படும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுதான் என்பதாலும், அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்வைத்து நடப்பதாலும் பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த பொதுக்குழுவில் அடுத்த தலைமுறையினரை முன்னிலைப்படுத்தும் வகையிலும், 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதேபோல் மாநிலம் மற்றும் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி வென்று இலக்கை எட்டுவதற்கான பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் என தெரிகிறது.

* கருப்பு, சிவப்பு ஆடையுடன் தொழிலாளர்கள் பங்கேற்பு

முதல்வரின் ரோடு ஷோ பழங்காநத்தம் ரவுண்டானாவில் இருந்து காளவாசல் நோக்கி சென்றபோது, போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு மண்டல செயலாளர் மேலூர் அல்போன்ஸ் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட தொமுச தொழிலாளர்கள் கருப்பு பேன்ட், சிவப்பு சட்டை அணிந்து சீருடையுடன்

அணிவகுத்து நின்று வரவேற்றனர்.

* ஆட்டம் பாட்டம் அமர்க்களம்

முதல்வரின் ரோடு ஷோ நடந்த இடங்களில் 500 முதல் 700 மீட்டர் தூரத்திற்கு பகுதி, பகுதியாக பிரிக்கப்பட்டு முதல்வரை வரவேற்கும் விதமாக சிறிய மற்றும் பெரிய மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் அரசின் நான்காண்டு சாதனைகளை சுட்டிக்காட்டும் வகையில் நம்பர் 1 முதல்வர் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

பைபாஸ் சாலையில் உள்ள எல்லீஸ் நகர் சந்திப்பு முதல் புது ஜெயில் ரோடு சந்திப்பில் உள்ள மேயர் சிலை திறப்பு வரை கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், நாதஸ்வரம், செண்டை மேளம், நையாண்டி மேளம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிம்மக்கல் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்ததுடன், அங்கு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

* மேயர் முத்து சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

மதுரை மாநகராட்சியின் முதல் மேயர் முத்து. சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு சிந்தனையாளர். திராவிட கொள்கையில் ஈர்க்கப்பட்டு மதுரை முத்து என்று அழைக்கப்பட்டார். நகராட்சியாக இருந்த மதுரை நகரம் 1971ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக முத்துவை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார்.

இரண்டாவது முறையாகவும் அவரே மேயராக தொடர்ந்தார். 1984ல் இறந்ததும், அவரது நினைவாக புதுஜெயில் ரோடு சந்திப்பில், மெஜூரா கோட்ஸ் எதிரே முத்துவிற்கு வைக்கப்பட்ட சிலையை கலைஞர் திறந்து வைத்தார். தற்போது அந்த சிலை வெண்கலச் சிலையாக மாற்றப்பட்டு, அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திறந்து வைத்தார்.

* சாலமன் பாப்பையாவுக்கு சால்வை அணிவித்து முதல்வர் கவுரவம்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நடைபயணமாக சென்ற முதல் அமைச்சர் சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த அசார் - அசன் பானு தம்பதியரின் குழந்தைக்கு தளபதி என்று பெயர் சூட்டினார். புதுஜெயில் ரோடு சந்திப்பிற்கு முன்பாக ஏஏ ரோடு பகுதியில் தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா சாலையோரம் நின்று முதல்வரை வரவேற்றார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வையை சாலமன் பாப்பையாவிற்கு அணிவித்து அவரை வாழ்த்தினார்.

* மூன்றாவது முறையாக மதுரையில் பொதுக்குழு

கடந்த 15.5.1977ல் மதுரை செல்லூர் நந்தவனம் பகுதியில் நடந்த பொதுக்குழுவில் தான் பொதுச்செயலாளராக‌ பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளராக சாதிக் பாட்சா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை தொடர்ந்து கடந்த 1978 ஜூன் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் அடுத்த பொதுக்குழு நடந்தது. திமுக தலைமை பொறுப்பில் அண்ணா, கலைஞர் ஆகியோர் இருந்த காலகட்டத்தில் சென்னை தவிர்த்து, வெளியூர்களில் பொதுக்குழு நடந்துள்ளது. கடந்த 23.7.2011ம் ஆண்டு கோவையில் பொதுக்குழு நடந்தது. இதன்பிறகு தற்போது மதுரையில் மூன்றாவது முறையாக பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது.

* டிரோனால் பரபரப்பு

மதுரை அவனியாபுரம் பெரியார் சிலை அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் வேனில் வந்தபோது, அவருக்கு மேலே ஒரு டிரோன் பறந்தது. டிரோன் பறக்க தடை இருந்த நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்த போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையிலான போலீசார், முதல்வரின் தனிப்பிரிவு போலீசார் இணைந்து டிரோனை தடுத்து, நிறுத்தி பறிமுதல் செய்தனர்.

* மும்மத வேடமணிந்து வரவேற்பு

63வது வார்டு திமுக சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர் வேடம் அணிந்து 280க்கும் மேற்பட்ட குழந்தைகள், 1,700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதல்வரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பகவத் கீதை, குர்ஆன், பைபிள் மற்றும் கலைஞரின் பல்வேறு புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினர்.

* 4 மணி நேரம் 25 கிமீ பயணம்

மாலை 5.15 மணியளவில் மதுரை பெருங்குடியில் தனது ரோடு ஷோவை தொடங்கிய முதல்வர், 25 கி.மீ ரோடு ஷோவை இரவு 9.15 மணிக்கு நிறைவு செய்தார். தொடர்ந்து கோரிப்பாளையம் பந்தல்குடி வந்து அங்குள்ள கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

* தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 25 கிமீ ரோடு ஷோ சென்றது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

* சாலையோரம் நின்றிருந்த பெண்கள் முதல்வருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். சுமார் 2 கிமீ தூரம் வரை நடந்து சென்று மக்களை சந்தித்தார்.