Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் இருந்தனர். தேர்தலில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில், 74 ஆயிரத்து 260 ஆண் வாக்காளர்கள், 80 ஆயிரத்து 376 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் வாக்களித்தனர். முன்னதாக 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் 246 பேர், ராணுவத்தில் பணியாற்றுவோர் 4 பேர், சிறையில் உள்ள ஒருவர் என மொத்தம் 251 பேர் தபால் வாக்கு பதிவு செய்திருந்தனர்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அருகே உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு லாரியில் எடுத்து செல்லப்பட்டு, ‘ஸ்ட்ராங் ரூமில்’ வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. தேர்தலில் மொத்தம் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து வாக்கு எண்ணும் பணி ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்தார். இதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 17 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் 1,14,439 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றது. பதிவான வாக்குகளில் 75% வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்று சந்திரகுமார் வெற்றி பெற்றார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். திமுகவை எதிர்த்து 45 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை பறிகொடுத்தனர். அதிமுக, பாஜக போட்டியிடாத நிலையிலும் நாதகவால் டெபாசிட் பெற முடியவில்லை.