Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.7,850 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.7,850 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆரணி சேவூர் ராமசந்திரன் (அதிமுக) பேசும்போது, மீட்கப்பட்ட திருக்கோயில் நிலங்கள், இன்றும் கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கோயில் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இது நிறுத்தப்பட்டு விட்டதால் பல யானைகள் இறந்துள்ளது என்றார்.

இதற்கு பதில் அளித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ.2800 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மட்டுமே மீட்கப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7,850 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.450 கோடி மதிப்பிலான 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் ரூ.5,000 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் கட்டாயம் மீட்கப்படும். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்ல்களில் 28 யானைகள் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் பணியில் ஈடுபடுகிறது. அனைத்து யானைகளுக்கும் குளியல் தொட்டி அந்தந்த கோயில்களில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

மேலும், மாதம் 2 முறை வனத்துறை குழு மருத்துவ குழு இணைந்து யானைகளுக்கு உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகள் நடைப்பயிற்சி செய்யும் அளவிற்கு திருக்கோயில்களிலேயே பாதை அமைத்து யானைகளின் நலன் காக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இறந்து போன 10 யானைகளின் நினைவாக யானைகள் மண்டபத்தை கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருத்தணியில் யானை மண்டபம் இந்த மாத இறுதியில் திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* திருப்பதிக்கு நிகராக திருசெந்தூர் மாறும்..

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் நேற்று கூறும்போது, கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.22 கோடியுடன் கூடுதலாக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து திருசெந்தூர் பக்தர்கள் தங்கும் விடுதி ஓராண்டுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்து விட்டது. திருச்செந்தூர் கோயிலுக்கு பெருந்திட்ட பணிகளுக்கு அனுமதி பெற்று 440 கோடி ரூபாய் அளவுக்கு திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூரை வடிவமைக்கும் சிற்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.