Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

சென்னை: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடக்கிறது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த குழுவில் திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வர இருக்கும் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய திமுக தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும் வகையில், மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்பு குழு இதுவரை திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது அணியினர் தெரிவித்த கருத்துக்களை கேட்டறிந்தது. மேலும் அந்த குழு அணியினருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியது. தொடர்ந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்.

வெளிநாட்டில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 8ம் தேதி திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான வெற்றி வியூகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிலையில் மீண்டும் ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது. இதில் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.