சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாயுமானவர் திட்டத்தில் அக்டோபர் 5, 6ல் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6ம் தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.