*கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்க பொதுமக்களுக்கு வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்வதை கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை தீர்க்க வருகின்ற ஜூலை 15ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 10,000 இடங்களில் 15 அரசு துறைகளுடன் இணைந்து, பொதுமக்களுக்கு 46 சேவைகள் வழங்குவதுடன் கலைஞர் உரிமை தொகைக்கான முகாமும் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதற்கான பணிகள் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் வருவாய் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று முகாமில் வழங்கப்படும் சேவைகள், பயன்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் விடுபட்ட மகளிர் உரிமை தொகைக்கும் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவித்து எங்கு முகாம் நடைபெறுகிறது, என்னென்ன திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் மற்றும் விண்ணப்ப படிவம் வழங்கி தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை நகராட்சி 14வது வார்டில் தியாகி மாணிக்கநாயக்கர் தெருவில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டி தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் விநியோகிப்பதை மாவட்ட கலெக்டர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு உங்களுக்கான பயனை பெற வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக வாலாஜா நகராட்சி 2வது வார்டிற்கு உட்பட்ட சுப்பராயர் தெருவில் வீடுவீடாக விண்ணப்பங்கள் வழங்குவதை கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகள் விவரங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை ஆர்டிஓ ராஜராஜன், தாசில்தார் ஆனந்தன் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் ப்ரீத்தி, இளையராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.