மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும் அந்த குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமை பெறலாம்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
பேரவையில் கேள்வி நேரத்தின் போது கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகை மாலி பேசுகையில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “கடந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்ட 1503 மையங்களில் 1203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தாண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது” என்றார்.
அதேபோல், குமாரப்பாளையம் எம்எல்ஏ பி.தங்கமணி(அதிமுக) பேசுகையில், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 1500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால், மனநலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிமைத் தொகை மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்துள்ளார்” என்றார்.