Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் பணியாற்றிய இயக்குனர் ஓம் சக்தி ஜெகதீசன் காலமானார்

சென்னை: சீனியர் இயக்குனரும், திரைப்பட எழுத்தாளருமான ஓம் சக்தி ஜெகதீசன் (95) நேற்று காலமானார். திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், இயக்குனருமான அவர், இதுவரை 100க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் ‘ஆயிரத்தில் ஒருத்தி’, ‘ஜானகி சபதம்’, ‘ஸ்கூல் மாஸ்டர்’, ‘கடவுள் மாமா’, ‘தேவி தரிசனம்’, ‘சுப்ரபாதம்’, ‘தாய் மூகாம்பிகை’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ள ஓம் சக்தி ஜெகதீசன், தமிழில் திரைக்கு வந்த ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி’, ‘சமயபுரத்தாளே சாட்சி’, ‘மேல்மருவத்தூர் அற்புதங்கள்’, ‘பதில் சொல்வாள் பத்ரகாளி’, ‘கைகொடுப்பாள் கற்பகாம்பாள்’, ‘ஒரே தாய் ஒரே குலம்’, ‘இவர்கள் இந்தியர்கள்’ ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

சிவாஜி கணேசன் நடிப்பில், நடுக்கடலில் பயணம் செய்யும் கப்பலில் படமாக்கப்பட்ட ‘சிரஞ்சீவி’ என்ற படத்தை கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார். டி.வியில் ஒளிபரப்பான ‘மகான் ராமானுஜர்’ என்ற தொடரை இயக்கியுள்ள ஓம் சக்தி ஜெகதீசன், எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் சரத்பாபு, சுமலதா நடித்த ‘திசை மாறிய பறவைகள்’ என்ற படத்தை இயக்கி, தமிழக அரசின் விருது பெற்றுள்ளார். ஓம் சக்தி ஜெகதீசனின் உடல் இன்று மாலை போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. ஓம் சக்தி ஜெகதீசனுக்கு 2 மகன்கள் உள்ளனர்.