Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திரைப்பட பயிற்சி நிறுவன தலைவர் ட்ராட்ஸ்கி மருது நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக ட்ராட்ஸ்கி மருது நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (திரைப்பட தொழில்நுட்பம்) துறை நியமனம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையிலுள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனமானது, முன்பு அடையார் திரைப்பட நிறுவனம் என்று அழைக்கப்பட்டது. இது ஆசியாவின் முதல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனமாகும்.

1945-ம் ஆண்டில் அடையாறு திரைப்பட நிறுவனமாக நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முன்னோடி திரைப்பட நிறுவனங்களில் ஒன்றாக மிகச்சிறந்த முறையில் பயிற்சிகளை அளித்து வருகிறது. இது சென்னை அடையாறு அடுத்த தரமணியில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தமிழ்நாடு மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. திரைக்கதை மற்றும் இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலி பொறியியல், திரைப்பட எடிட்டிங் மற்றும் திரைப்பட செயலாக்கம் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் போன்ற பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் கடந்த 2022ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த பயிற்சி நிறுவனத்தில் ஒருதலைவர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள இந்நிறுவனத்தின் தலைவராக ட்ராட்ஸ்கி மருதுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

டிராட்ஸ்கி மருது 1953ம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியரும், இயங்குபடக் கலைஞரும், திரைப்பட சிறப்புத் தோற்ற இயக்குநரும் ஆவார். உலகக் காண்பியல் தளத்தில் தமிழ் அடையாளத்தை முதன்மையாகப் பதிவு செய்தவர்களில் ஒருவராகவும், வெகுமக்கள் ஊடகங்களில் செயல்பட்டு நவீன ஓவியத்தைக் கொண்டுசென்றவராகவும், காண்பியக்கலை வெளிப்பாட்டிற்குக் கணினியைப் பயன்படுத்தியதில் முன்னோடியானவராகவும், இளங்கலைஞர்களை இயங்குபடத் துறையில் ஊக்கப்படுத்தி வளர்த்தவராகவும் கருதப்படுகிறார்.