Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உண்மையான கல்வி எது? - சுவாமி விவேகானந்தர்

மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியருடைய வேலையாகும்.

நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டு பிடித்தார் என்று சொல்கிறோம். அந்த புவியீர்ப்புச் சக்தி எங்காவது ஒரு மூலையில் நியூட்டன் வருவார் என்று உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டு பிடித்தார். காலமெல்லாம் உலகம் இதுவரையிலும் பெற்று வந்திருக்கும் அறிவு முழுவதும், மனதிலிருந்துதான் வந்திருக்கிறது. பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல் நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் ஒரு தூண்டுதலாக மட்டும் அமைகிறது. அது உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை. மனஉறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு (ஆக்கபூர்வமாகப்) பயன் தரும் வகையில் அமைவதற்கு உரிய பயிற்சிதான் கல்வியாகும். கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

வாழ்க்கையை உருவாக்கக்கூடிய, மனிதனை மனிதனாக்கக்கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக்கூடிய கருத்துகளை கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும். நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளை கிரகித்துக்கொண்டு, அவற்றை உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.