Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச கேரம் போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் வென்று தமிழக மாணவி சாதனை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மெஹபூப் பாஷா. இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு அசினா, காசிமா என இரண்டு மகள்கள் அப்துல் ரஹ்மான் என ஒரு மகன் உள்ளனர். மெஹபூப் பாஷா கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக அதேபகுதியில் செரியன் நகர் கேரம் கோச்சிங் சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில், 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கேரம் பயிற்சி பெற்று வருகின்றனர். தந்தையுடன் கேரம் கோச்சிங் சென்டருக்கு வந்த மெஹபூப் பாஷாவின் மூன்றாவது மகள் காசிமாவுக்கு கேரம் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டதால் கேரம் விளையாட்டை கற்றுக்கொடுக்குமாறு தந்தை மெஹபூப் பாஷாவிடம் தெரிவித்துள்ளார். மகளின் ஆர்வத்தைக் கண்ட மெஹபூப் பாஷா, தனது மகள் காசிமாவுக்கு கேரம் விளையாட்டு குறித்து பயிற்சி அளித்துவந்துள்ளார்.

7 வயது முதலே காசிமா கேரம் விளையாட்டுப் பயிற்சியில் தீவிரமாக விளையாடி வந்துள்ளார். ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு போட்டிகளில் கலந்துகொண்டு கேரம் விளையாட்டின் நுட்பங்களை அறிந்துகொண்டு தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெற்ற கேரம் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பரிசுக் கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்து வந்த காசிமா சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரிக் கல்வியோடு கேரம் விளையாட்டையும் தொடர்ந்தார். வட்டம், மாவட்டம், மாநிலம் என நடைபெற்ற அனைத்து கேரம் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நிலையில், சாதனைச் சிறகுகளை விரித்து சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த 6வது சர்வதேச அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். மொத்தம் 18 நாடுகள் கலந்துகொண்டன. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதற்கு ஏற்ப கேரம் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு கேரம் போட்டியில் கலந்துகொண்டு 3 தங்கப்பதக்கங்களுடன் வெற்றிவாகை சூடி தங்கத் தாரகையாக ஜொலிக்கும் காசிமாவுக்கு பலதரப்பிலும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

தனது மகள் காசிமாவின் வெற்றி குறித்து ஆட்டோ டிரைவர் மெஹபூப் பாஷா கூறுகையில், ‘‘கேரம் விளையாட்டின்மீது கொண்ட ஆர்வம் காரணமாக நாங்கள் குடியிருக்கும் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் எங்கள் ஏரியா பெயரிலேயே ‘செரியன் நகர் கேரம் கோச்சிங் சென்டர்’ ஒன்று நடத்தி வருகிறோம். எனது மகன் அப்துல் ரஹ்மான் ஏற்கெனவே தேசிய அளவிலான கேரம் போட்டியில் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியைப் பொதுமக்கள் கொண்டாடியதைக் கண்ட காசிமாவுக்கும் கேரம் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டு தனது விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து, காசிமாவுக்கு 7 வயது முதலே கேரம் விளையாட்டில் பயிற்சி அளித்தேன். பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த பிறகு கேரம் விளையாட்டில் பயிற்சி எடுத்துவந்தார்.

அதேபோல், பள்ளி விடுமுறை நாட்களிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தனித்திறமையை வளர்த்துக்கொண்ட காசிமா மிகவும் நுட்பமாக விளையாடினார். இதனைக் கண்ட சக போட்டியாளர்கள் காசிமாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவர் கேரம் விளையாட்டைச் சிறப்பாக விளையாடுகிறார், என்று ஊக்கமளித்தனர். மேலும், வெளி இடங்களில் நடைபெறும் கேரம் போட்டிகளில் பங்கேற்க செய்யுமாறு தெரிவித்தனர். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெறும் கேரம் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க காசிமாவை அழைத்துச் சென்றேன். கேரம் போட்டிகளில் காசிமா பங்கேற்று வெற்றி பெற்றார். 2015ஆம் ஆண்டு மாவட்ட அளவில் நடந்த 12 வயது பிரிவு கேரம் போட்டியில் ரன்னராக தேர்வானார். அதே ஆண்டில் திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் ரன்னராகத் தேர்வானார். தொடர்ந்து, மகாராஷ்ட்ராவில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் ரன்னராகத் தேர்வானார். 2021ம் ஆண்டு கேரம் விளையாட்டில் ஜூனியர் டைட்டிலும், சீனியர் பிரிவில் டீம் சாம்பியன் பட்டம் வென்றார். தேசிய அளவில் 3வது இடமும், சீனியர் பிரிவு பெடரேஷன் போட்டியிலும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க காசிமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பயணச் செலவுக்குப் பணம் இல்லை. அந்த நேரத்தில் தமிழ்நாடு கேரம் பெடரேஷன் மூலமாகத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து உதவிக் கேட்டோம். எங்கள் கோரிக்கையைக் கேட்டறிந்த துணை முதல்வர் மறுநாளே எங்களுக்கு ₹1.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் காசிமாவுக்கு கேரம் போட்டியில் அர்ஜுனா விருது பெற்ற சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த பிரபல கேரம் விளையாட்டு சாம்பியன் மரிய இருதயம் பயிற்சி அளித்தார்.

அவரது தீவிர பயிற்சி, காசிமாவின் கேரம் விளையாட்டை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மற்றும் உறவினர்கள், எங்கள் பகுதி மக்கள் அளித்த ஊக்கம் என இவை அனைத்தும் ஒன்றிணைந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த சர்வதேசக் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர், குழு போட்டிகளில் கலந்துகொண்ட காசிமா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காசிமாவுக்கு வாழ்த்து தெரிவித்தது பெருமகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல், உறவினர்களும், எங்கள் ஏரியா பொதுமக்களும் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த காசிமாவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்து உற்சாகமாக கொண்டாடினர். கேரம் விளையாட்டின் மூலம் இந்தியாவிற்கு 3 தங்கப்பதக்கங்கள் பெற்றுத்தந்த எனது மகள் காசிமாவை நினைத்து பெருமையாக உள்ளது’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ‘திறமை இருந்தால் வறுமையிலும் சாதிக்கலாம்’ என்பதற்கு சர்வதேச கேரம் சாம்பியன் காசிமா மிகச்சிறந்த உதாரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

- இர.மு.அருண் பிரசாத்