Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விடுதலைக்குப் பாடுபட்ட தென்னாட்டு ஜான்சிராணி

நம் நாடு விடுதலை பெறுவதற்கு எண்ணற்ற மறவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்திருக்கின்றனர். பலர் சிறைக் கொட்டடியில் தங்கள் வாழ்நாளைக் கழித்திருக்கின்றனர். பல அடக்குமுறைகளுக்கு ஆளாகி அவதிப்பட்டு உள்ளனர். புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுத்த பகத்சிங், நேதாஜி போன்றவர்களும் உண்டு. அறவழியில் போராடி காந்தியை பின்பற்றியவர்களும் பலர். இப்படிப் பல்வேறு வடிவங்களில் நம் விடுதலைப் போராட்டம் நடந்திருக்கிறது. அதற்காக நம் முன்னோர்கள் செய்த அத்தனை தியாகங்களையும் நாம் மறவாமல் நினைவுகூர்வது அவசியம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்புநிலைத் தலைவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின. வரலாற்றுத் தரவுப்படி நிலையில் இத்தகைய பிழைகள் இன்றுவரைத் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர்தான் விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள். கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ம் எண் இல்லத்தில் 1890ம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5ம் வகுப்புவரை மட்டுமே படித்தவர்.

பெண்அடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெண்மணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றார் என்பது வரலாற்றுச் சாதனையாகும். 1921ம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கை தொடங்கி விட்டது. 1927ம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 1930-உப்புச் சத்தியாகிரகப்போர், 1933-கள்ளுக்கடை மறியல், 1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர்.

குறிப்பாக வேலூர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932ம் ஆண்டு வேலூர் பெண்கள் சிறையில் 727ம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாதக் கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை. அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகன் என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார்.

அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார். இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்துகொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்துகொண்டார். காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார்.

கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் (அப்போதைய) காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். இவர் கணவர் முருகன். 1932ம் ஆண்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56. தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஞ்சலையம்மாளும் அவர் கணவர் முருகனும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தறி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தறி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னாற்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் முயற்சியால்தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ்ரே கருவி கொண்டுவரப் பட்டது.

ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்தபோது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறுவேடத்தில் காந்தியடிகளை குதிரைவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்சிராணி என அழைத்தாராம். பண்ருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடிநீர் கிடைக்காமல் மக்கள் நரம்புச் சிலந்தி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார்.

வீராணம் ஏரியிலிருந்து புவன கிரிக்கு பாசனநீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்குப் பாசன வசதி செய்தார். அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. இத்தகைய வரலாற்று நாயகியை நம் பாடநூல்கள் அவ்வப்போது நினைத்துக் கொள்ளும். தற்போது தமிழக அரசு அவரின் தியாகத்தை போற்றும் வகையில் கடலூர் முதுநகரில் முழு உருவச்சிலை அமைத்து பெருமைப்படுத்தியுள்ளது. இதுபோல் மறைக்கப்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்களை இந்த விடுதலை நாளிலாவது நினைவு கூர்ந்து போற்றுவோம்.