Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விமானக் கறுப்புப் பெட்டி

பிளாக் பாக்ஸ் எனப்படும் விமானக் கறுப்புப்பெட்டி தொழில்நுட்ப ரீதியாக ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் என்று அழைக்கப்படுகிறது. இது விமானத்தினுள் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும். விமானம் விபத்திற்குள்ளாகும்போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும். விமான விபத்துகள் அதிகரித்து வந்ததைக் கருத்தில் கொண்டு, விமான விபத்துகளுக்கான காரணங்களைப் பற்றிய தகவல்களைத் தரக்கூடிய ஒரு சாதனத்தை உருவாக்குவது மற்றும் விபத்துகளில் இருந்து விமானங்களைக் காப்பாற்றுவது என்ற கருத்தின் அடிப்படையில் இதுபோன்ற ஒரு கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. முன்பு இந்த பெட்டி சிவப்புநிறத்தில் இருந்ததால் ‘சிவப்பு முட்டை’ என்று பெயர் வந்தது. பெட்டியின் உட்புறச் சுவர்கள் கறுப்பு நிறத்தில் இருந்ததால், அது ‘கறுப்புப் பெட்டி’ என்று அழைக்கப்பட்டது. ஒரு விமானத்தில் பொதுவாக இரண்டு கறுப்புப் பெட்டிகள் இருக்கும், ஒன்று விமானத்தின் முன்புறத்திலும் மற்றொன்று பின்புறத்திலும் இருக்கும். கறுப்புப் பெட்டியில் இரு பகுதிகள் உண்டு. கறுப்புப்பெட்டியின் ஒரு பகுதியான விமானியறை குரல் பதிவி(Cockpit Voice Rocorder), விமான ஓட்டியின் அறையில் நிகழும் உரையாடல்களைப் பதிவு செய்யும். இது கடைசி 2 மணி நேரத்திற்கு விமானிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களையும் பதிவு செய்து வைத்திருக்கும்.

கறுப்புப்பெட்டியின் மற்றொரு பகுதியான விமானத் தரவுப் பதிவி (Flight Data Recorder), விமானத்தின் வால்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.

இது விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை தகவல், விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணிகளைப் பதிவு செய்யும்.டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்ட இவை புவிஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1000 டிகிரி செல்ஷியஸ் விடவும் அதிக வெப்பநிலையையும் தாங்கக்கூடியது. விமானம் விபத்துக்குள்ளானால் கறுப்புப்பெட்டியிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை வரும். இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியும். இது சுமார் 13 பவுண் எடையைக் கொண்டவையாகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். நீண்டகாலமாகவே கறுப்புப் பெட்டி தண்ணீரில் விழுந்தால் மிதக்கும் தன்மையுடனும், எளிதில் திறக்கக்கூடிய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கறுப்புப் பெட்டியின் தனித்தன்மைகள்: செம்மஞ்சள் நிறத்தில் (orange) காணப்படும். பயங்கர தீ/உயர் வெப்பநிலை போன்றவற்றால் எரிந்து சேதமுறாது. உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது. கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது. ஆகாயத்தில் இருந்து விழுந்தாலும் உடையாது. எங்கு விழுந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும். வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும் தகவல் சேமிப்பு நாடாவும் பாதுகாக்கப்படுகின்றன.