பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2020ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் சமீபத்தில் நடந்தது. இக்கருத்தரங்கை யுஜிசி தலைவர் எம்.ஜெகதிஷ் குமார் தொடங்கிவைத்தார்.
இதில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடக்கவிழா முடிவடைந்த பிறகு யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘இந்தியாவில் வலிமையான, தரமான உயர்கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இக்கல்வி நிறுவனங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்குப் பெருமளவு உறுதுணையாக இருக்கின்றன. இன்றைய தினம் நம் நாடு தொழில்நுட்ப ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு இங்குள்ள இளைஞர்கள்தான் காரணம். 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். எனவே, நாம் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் வேகமாக முன்னேற வேண்டும்.இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சமூக, பொருளாதார ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
இத்தகைய சூழலில் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச்செய்வது என்பது உண்மையிலேயே பெரிய சவால்தான். உயர்கல்வி என்று வரும்போது ஆங்கிலமொழிப் பிரச்னை பெரும்பாலான மாணவர்களுக்கு பெரும்தடையாக இருந்துவருகிறது. எனவே, அவர்களுக்கு தாய்மொழியில் உயர்கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆங்கிலத்தைத் தகவல் தொடர்புக்காக ஒரு மொழிப்பாடமாக படித்தால் போதும். உலகில் முன்னேறிய நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் உயர்கல்வி வழங்கப்படுகிறது.மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்குத் திறன் சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. சில மாணவர்கள் ஏதேனும் ஒரு தொழிலில் சிறந்து விளங்குவார்கள். அவர்களின் தொழில்அறிவை அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் படிப்பில் தொழில் அறிவுக்குக் குறிப்பிட்ட கிரெடிட் வழங்குவது என யுஜிசி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
அதேபோல், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், அதேபோல், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.இந்த புதிய முறையின்படி, மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலைப் பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். அதேபோல், படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது” என்று அவர் கூறினார்.