Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்க ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பு முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்கும் சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறை ஆகிய துறைகள், சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து வேளச்சேரி பகுதியில் நடத்திய வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்கும் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்கும் முகாம்கள் ஆகஸ்ட் 31ம் தேதி நடத்தப்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு மிக முக்கிய காரணமாக வயிற்றுப்போக்கு இருக்கிறது. எனவே அதனைத் தடுக்கும் வகையில் ஓஆர்எஸ் பவுடர்கள் ₹1.25 கோடி செலவில், 40 லட்சம் பாக்கெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. ₹1.68 லட்சம் மதிப்பிலான சின்க் மாத்திரைகளும் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 58 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற இருக்கின்றனர்.

சைதாப்பேட்டை சிறுவன் மரணம் குறித்து, அவருடைய உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துவிடும், அந்தப் பகுதியில் 2500 பேர் வசிக்கின்றனர். அப்படி குடிநீரில் பாதிப்பு இருந்தால் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு வந்திருக்க வேண்டும். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக புகார் வந்தது. அதனை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் மேலாண்மை இயக்குனர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இருந்தாலும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்காவது பாதிப்பு இருக்கின்றதா என விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, உலக வங்கியில் கடன் வாங்கப்பட்டு மருத்துவத் துறையில் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு அதற்கான பணிகள் முடிந்துள்ளது. தற்பொழுது அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று அவர்களைச் சந்தித்து கடன் கேட்க திட்டமிட்டுள்ளோம். அத்துடன் ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் ‘மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காப்போம்’ என்ற தலைப்பில் பேச இருக்கிறேன். அதில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்கள் குறித்து பேசும் ஒரு வாய்ப்பை பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.