Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாமகவுக்கு கைகொடுக்காத தர்மபுரி கடந்த முறை கணவர் அன்புமணி இந்த முறை மனைவி சவுமியா தோல்வி

தர்மபுரி: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், கடந்த முறை கணவர் அன்புமணி தோல்வி அடைந்ததை போலவே இம்முறை அவரது மனைவி சவுமியாவும் முதலில் முன்னணி வகித்து கடைசியில் தோல்வியை தழுவினார்.தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ஆ.மணி, அதிமுக வேட்பாளர் அசோகன், பாஜ கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி உள்பட 24 பேர் போட்டியிட்டனர்.

நேற்று தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் சுற்றில் பாமக வேட்பாளர் சவுமியா, திமுக வேட்பாளரை விட 9,958 வாக்குகள் அதிகம் பெற்றார். தொடர்ந்து அதிக வாக்குகள் முன்னணியில் இருந்த நிலையில், 11வது சுற்றில் வித்தியாசம் 828 ஆக குறைந்தது. 12வது சுற்றில் திமுக வேட்பாளர் ஆ.மணி, 6,666 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி வகிக்கத் தொடங்கினார். 23வது சுற்றில் 21,300 வாக்குகள் கூடுதலாக பெற்ற அவர், பாமக வேட்பாளர் சவுமியாவை தோற்கடித்தார்.

திமுக 4,32,667 வாக்குகளும், பாமக 4,11,367 வாக்குகளும் பெற்றன. கடந்த 2019ல் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக தலைவர் அன்புமணி 13வது சுற்று வரை 20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். பின்னர், படிப்படியாக குறைந்து தோல்வியை தழுவினார்.  கடந்த முறை பாமகவின் தோல்விக்கு, கூட்டணி கட்சியான அதிமுகவினர் சரியாக வேலை செய்யாததும், அரூர், தர்மபுரி மற்றும் பென்னாகரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில், திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததும் காரணம் என கூறப்பட்டது.

தற்போது அவரது மனைவி சவுமியா அன்புமணி 11 சுற்றுகள் வரை திமுக வேட்பாளரை காட்டிலும் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தார்.  அதன் பின்னர், அரூர், பாலக்கோடு மற்றும் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்பட்டபோது, பாமகவுக்கு 40 ஆயிரம் வாக்குகள் குறைந்து, திமுகவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. இதனால், 11வது சுற்றுகள் வரை 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்ற சவுமியா தோல்வி அடைந்துள்ளார்.

* வெற்றி, தோல்வி அரசியலில் சகஜம்: சவுமியா அன்புமணி பேட்டி

தோல்வி குறித்து சவுமியா அன்புமணி அளித்த பேட்டி: எனக்காக பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நன்றி. வெற்றி பெற்ற வேட்பாளர் மணிக்கு வாழ்த்துக்கள். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி. நான் தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல் முறை. ஆனால், அரசியல் எனக்கு புதிதல்ல.

எனது தாத்தா 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர். எனது தந்தை, 2 முறை எம்பியாக பணியாற்றியவர். எனது கணவர் அன்புமணி, தேர்தலில் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை படைத்தவர். வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜம் என்றார். பேட்டியின்போது பாமக தலைவர் அன்புமணி எம்பி, பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர் இருந்தனர்.