* ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் உத்தரவு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டுமானப்பணி, பேரூராட்சியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப்பணி, அய்யங்குளம் மேம்படுத்தும் பணி, மோட்சகுளம் பகுதியில் முதல்வரின் முகவரித்துறை சார்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகள் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: வளவனூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களாக 11 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, வளவனூர் பேரூராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், ரூ.16.5 கோடி மதிப்பீட்டில் 3179 குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் 1.50 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் 14 மற்றும் 15வது வார்டு பகுதிகளில் வசிக்கும் 450 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், வளவனூர் பேரூராட்சிக்குட்பட்ட பக்கமேடு பாதை பகுதியில், அய்யங்குளத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திட்டத்தின்கீழ், ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் குளத்தினை தூர்வாரி, சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டதுடன், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மோட்சகுளம் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மோட்சகுளம் பகுதியில், முதல்வரின் முகவரித்துறை சார்பில், ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் கையேடுகள் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கண்டமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின்கீழ், 16 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, கண்டமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் விதை இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், 5 விவசாயிகளுக்கு தலா ரூ.4000 மதிப்பீட்டில் குறுவை தொகுப்புகளையும், வேளாண் பசுமை காடுகள் இயக்கத்தின்கீழ், 3 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளையும், 3 விவசாயிகளுக்கு மகாகனி மற்றும் செம்மரக் கன்றுகளை வழங்கினார்.
தொடர்ந்து, நவமால் மருதூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், நாற்றாங்கால் பண்ணையில் பூவரசன், புளியமரம், சீத்தா, நாவல், கொய்யா போன்ற 6500 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கண்டமங்கலத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.