பெரம்பூர்: ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (20). இவர், பெரவள்ளூர் அகரம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்துவரும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் சிறுமியின் தாய் கண்டித்ததுடன் சிறுமியை வேலைக்கு செல்லவேண்டாம் என்று நிறுத்திவிட்டார். இதன்பிறகு சிறுமி தனது தாய்க்கு தெரியாமல் சந்தோஷை திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் தங்களது வீட்டில் வசித்துக்கொண்டு அவ்வப்போது சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இதன்காரணமாக சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.
இந்த நிலையில், கர்ப்பமான விஷயம் சிறுமியின் தாய்க்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் தீவிரமாக விசாரித்தபோது தனக்கு திருமணம் நடந்தது பற்றியும் வாலிபருடன் அடிக்கடி தனிமையில் இருந்தது பற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செண்பகதேவி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி சந்தோஷை கைது செய்தார். இவர் சிறுமி வேலை செய்த துணிக்கடையின் அருகே கார்பென்டர் வேலை செய்துள்ளார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார் என்று தெரிந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.


