Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு: தமிழ்நாடு முழுவதும் 13ம் தேதி நடக்கிறது

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் வருகிற 13ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28ம் தேதி வெளியிட்டது. இதில் துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி ஒரு பணியிடம் அடங்கும்.

இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தல் தொடங்கியது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதனால் தேர்வுக்கு இளங்கலை, முதுங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள், என்ஜினீரியங் படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். சுமார் 3 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு வருகிற 13ம் தேதி நடக்கிறது.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதுவோர் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் என்ன என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதாவது தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை தேர்வு மையத்திற்கு கொண்டுவர வேண்டும். தேவைப்பட்டால் தேர்வுக்கூடத்தில் காவல் துறையிலுள்ள ஆண், பெண் காவலர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட நபர்களால் தேர்வர்கள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேர்வு மையத்தின் அனைத்து நுழைவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே மூடப்படும். அதன் பின்னர், வரும் எவரும் தேர்வுமையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வர்கள் தேர்வு அறையில் மட்டுமின்றி, தேர்வு மைய வளாகத்திலும் கண்டிப்பாக ஒழுங்குமுறையை கடைப்பிடிக்க வேண்டும். தேர்வுக்கூட வளாகத்திலோ, தேர்வு நடைபெறுவதற்கு முன்னரோ, பின்னரோ அல்லது தேர்வு நடைபெறும் போதோ, தவறாக நடக்கும் தேர்வர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது. மேலும், தேர்வாணையம் தக்கதெனக் கருதும் காலம் வரை தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். மேலும், அத்தேர்வர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். உள்ளிட்ட அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.