Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Tuesday, August 5 2025 Epaper LogoEpaper Facebook
Tuesday, August 5, 2025
search-icon-img
Advertisement

டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நாளை மறுநாள் (பிப். 5) ஒரே கட்டமாக நடைபெறுவதால், மொத்தம் 70 தொகுதிகளிலும் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஆனார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து சிக்கி சிறை சென்றது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த 2024 செப்டம்பர் 21ம் தேதி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, அக்கட்சியில் அமைச்சராக இருந்த அடிசி முதல்வராக பதவியேற்றார்.

தற்போது நடைபெறும் பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பேசி வருகிறார். டெல்லியில் மீண்டும் ஷீலா தீட்சித் மாடல் ஆட்சி கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் 2 இடங்களை மட்டும் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக ஒதுக்கிய நிலையில், டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜக முழு வீச்சில் இறங்கியுள்ளது. இதற்கிடையே, டெல்லியில் தேர்தல் பிரசாரம் சற்று முன் ஓய்வடைந்தது. அங்கு பல மாநிலங்களை சேர்ந்த மக்களும் வசிப்பதால், 70 தொகுதிகளிலும் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொண்டனர். இதற்கிடையே நேற்று டெல்லியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். இன்று மாலை 6 மணிக்கு பிறகு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி இல்லை. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிபடுத்தும் வகையில், பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி டெல்லி சட்டப் பேரவை தேர்தல் மற்றும் உத்தரபிரதேச தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.