செண்பகவல்லி தடுப்பணை மீட்பு எழுச்சி மாநாடு விவசாயிகள் எங்கே போராட்டம் நடத்தினாலும் கண்டிப்பாக ஆதரவு தருவோம்
*டெல்லி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேச்சு
சிவகிரி : விவசாயிகள் எங்கே போராட்டம் நடத்தினாலும் கண்டிப்பாக ஆதரவு தருவோம் என்று செண்பகவல்லி தடுப்பணை மீட்பு எழுச்சி மாநாட்டில் டெல்லி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேசினார்.தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தென்மலையில் செண்பகவல்லி தடுப்பணை மீட்பு எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
ஜமீன்தார் முத்தரசு பாண்டியன், விவசாய சங்க தலைவர் காளிமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் பாபுராஜ், பொருளாளர் குருசாமி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி, பெண்கள் இணைப்பு குழு தலைவி பொன்னுத்தாய் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சுப்பையா, பூமிநாதன், சுப்பிரமணிய ராஜா, ஆறுமுகம், ஜாகீர் உசேன், வென்னிமலை, ரத்தினவேலு, திருப்பதி, பிச்சாண்டி, பரமசிவம், ரவிச்சந்திரன் கண்ணையா, புன்னைவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் அர்ச்சுணன் துவக்கவுரையாற்றினர். செண்பகவல்லி தடுப்பு அணை வைப்பாறு வடி நில பாசன பகுதி ஒருங்கிணைப்பாளர் முத்து கணேசன் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக டெல்லி போராட்டக்குழு தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் பஞ்சாப் ராஜ் விந்தர் சிங் கோல்டன் பேசுகையில், ‘செண்பகவல்லி அணை போன்ற பிரச்னை பஞ்சாப்பிலும் உள்ளது. அரியானாவிற்கு பஞ்சாப்பிலிருந்து தண்ணீர் கொடுப்போம். அதை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். தண்ணீர் அதிகமாக வரும்போது மட்டும் மற்ற மாநிலத்திற்கு தண்ணீரை திறந்து விடுவர்.
அது போன்று, செண்பகவல்லி அணை பிரச்னையை மக்களும், கேரள அரசும் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் எங்கே போராட்டம் நடத்தினாலும் கண்டிப்பாக ஆதரவு தருவோம். அதே போன்று, இங்கே வரும்போது பொதுமக்களின் பிரச்னைக்காக வந்து தீர்வு காண வேண்டும்.
அரசியல் ரீதியாக வரக்கூடாது. டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, எந்த அரசியல் கட்சிகளையும் மேடையில் ஏற்றவில்லை. ஒன்றுபட்டு நாம் செயல்பட்டால், எதுவும் சாத்தியம். டெல்லிக்கு எப்பொழுது வந்தாலும், தேவையான உதவிகளையும் செய்வோம்’ என்றார்.
கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ், பாஜ மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய ‘தென் மாவட்டம் வளம் பெற’ என்ற நூல் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாட்டினை தென்காசி விருதுநகர் தூத்துக்குடி மாவட்ட செண்பகவல்லி தடுப்பணை வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் விவசாயிகள் செய்திருந்தனர்.
கேரள - தமிழக எல்லையில் போராட்டம்
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், ‘நாம் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல. எங்களுக்கு நியாயம் வேண்டும். நாம் 1 லட்சம் பேர் இணைந்து செண்பகவல்லி தடுப்பணை மீட்புக்காக போராட்டம் நடத்தினால் ஒன்றிய அரசு தலைவணங்கும்.
இந்த செண்பகவல்லி அணையை திருப்பி கட்டினால் கேரளாவிற்கு எந்தவித நஷ்டமும் கிடையாது. ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தைப் போன்று நாம் நடத்தலாமா?. முதலில் நாம் சென்னையில் போராட்டம் நடத்துவோம். அடுத்து கேரளா, தமிழ்நாடு எல்லையில் நடத்துவோம். செண்பகவல்லி அணை மீட்கப்பட்டால் தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்ய முடியும்.
செண்பகவல்லி தடுப்பணை கட்டினால் 5 முதல் 10 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும். விவசாயிகளின் கூட்டத்தை கூட்டுவது என்பது பெரிய விஷயம். விவசாயிகள் போராட்டம் செய்வதற்கு வெளியே வருவதில்லை. வெளியே வந்துவிட்டால் கண்டிப்பாக வெற்றிதான். அதனால் விவசாயிகள் போராட்டத்திற்கு வர வேண்டும். நம்முடைய உரிமைக்காக போராடும் போது போலீஸ் கைது செய்து சிறையில் வைக்கும். அதற்காக பயப்படக்கூடாது’ என்றார்.