Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா? கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதிமுகவைக் கைப்பற்றிக் கொள்வதை விட காப்பாற்றுவதே முக்கியம் என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் புகழேந்தி மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து ஏப்ரல் 8ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது இன்று வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்து ஜூன் 21ஆம் தேதி நிறைவடைகிறது. 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும் 26ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 13-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதிமுகவைக் கைப்பற்றிக் கொள்வதை விட காப்பாற்றுவதே முக்கியம் என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தினுடைய தொண்டர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற வேண்டுகோள்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி 2019-ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது. எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும். என கூறியுள்ளார்.