சென்னை: அவதூறு பரப்பி, என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி, எனது எழுச்சிப் பயணம் தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
``மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம்`` என்கிற எனது முதற்கட்ட புரட்சிப் பயணத்தை, மக்கள் எழுச்சிப் பயணமாக மாற்றி, அதை இமாலய வெற்றிப் பயணமாக்கியதில் முழு பங்கும் தமிழக மக்களாகிய உங்கள் அனைவரையுமே சாரும்.
உங்கள் அனைவருக்குமே தெரியும், எனது முதற்கட்டமான இந்த எழுச்சிப் பயணத்தை ஜூலை 7ம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் ஆரம்பித்து, நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வரை பிரசாரப் பயணத்தை தொடர்ந்து வருகிறேன். கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 31 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 12.5 லட்சம் மக்களை சந்தித்திருக்கிறேன்.
அதிமுக என்கிற மாபெரும் ஜனநாயக இயக்கம், தமிழ் நாட்டு மக்களின் நாடி நரம்புகளில் ரத்தவோட்டமாகக் கலந்திருப்பதை மீண்டும் ஒருமுறை அனுபவப்பூர்வமாக கண்டு மகிழ்ந்தேன். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, எழுச்சிப் பயணத்தை தவறாக சித்தரித்து-என்மீது அவதூறு பரப்பி இருக்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், நீங்கள் என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி, எனது எழுச்சிப் பயணம் தொடரும்.