ஆழ்கடல் வணிகத்தில் அசத்தும் விழிஞ்சம் துறைமுகம்; ஆண்டுக்கு 45 லட்சம் கன்டெய்னர் கையாளும் வகையில் விரிவாக்கம்: இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம்
சென்னை: ஆழ்கடல் வணிகத்தில் அசத்தி வரும் விழிஞ்சம் துறைமுகமானது, ஆண்டுக்கு 45 லட்சம் கன்டெய்னர்களை கையாளும் வகையில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சர்வதேச நாடுகளின் துறைமுகங்களுக்கு சவால் விடும் வகையில் அசத்தி வருகிறது. இந்தியா மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும், இங்கு பெரிய சரக்கு கப்பல்கள் வந்து நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்கும் வகையில் பெரிய துறைமுகங்கள் கிடையாது. இதனால் இந்தியா வெளிநாடுகளின் துறைமுகங்கள் வாயிலாகவே கப்பல்களில் சரக்குகளை அனுப்பி வைத்து வந்தது. இந்தியாவிற்கு வர வேண்டிய சரக்கு கப்பல்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், கொழும்பு, துபாய் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து சிறு சிறு கப்பல்கள் மூலம் தான் இந்தியாவிற்கு சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன.
அதேபோன்று, இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய பொருட்களும் இங்கிருந்து சிறுசிறு கப்பல்கள் வழியாக சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட நாடுகளின் துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் விளைவாக இந்தியாவிற்கு பல்வேறு வகையில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியா, கப்பலில் சரக்குகளை அனுப்பி வைப்பதற்கு அதிக அளவிலான தொகையை செலவிட வேண்டி இருந்தது.
இந்தியாவில் பெரிய கப்பல்களை கையாளும் துறைமுகம் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது. இந்த குறையை போக்கும் வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதானி விழிஞ்சம் துறைமுகம், இந்தியாவின் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஒரு மைல் கல்லாக உருவெடுத்துள்ளது. இந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை அதானி குழுமம், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைத்துள்ளது. இந்த துறைமுகத்தை கடந்த மே மாதம் 2ம்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனால், இந்தியா சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காக வெளிநாட்டு துறைமுகங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை மாற்றப்பட்டுள்ளது. விழிஞ்சத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த துறைமுகம் பெரிய சரக்கு கப்பல்கள், டேங்கர் கப்பல்கள் வந்து சரக்குகளை ஏற்றி இறக்க தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஆண்டுதோறும் 220 மில்லியன் டாலர் செலவை சேமிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் சிறப்பு என்னவென்றால், சர்வதேச கிழக்கு-மேற்கு கப்பல் பாதையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைந்திருப்பதால், வணிகப் போக்குவரத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிக்க இருக்கிறது. இந்த துறைமுகம் சர்வதேச (கடல் வணிக) பாதைக்கு அருகாமையில் இருப்பதால் தான் இந்தியாவின் கிரீடமாக கருதப்படுகிறது. மேலும் 23 மீட்டர் வரை இயற்கையாகவே ஆழம் கொண்ட ஆழ்கடல் பகுதியாக விழிஞ்சம் துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நாட்டின் முதல் பிரத்யேக சரக்கு பரிமாற்ற துறைமுகமாகும். மேலும், நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமும் இதுவே. இங்குள்ள கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். தற்போது ஆழ்கடல் சரக்குப் போக்குவரத்து துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் இனி 20 ஆயிரம் கன்டெய்னர்களைக் கொண்ட எந்த சரக்கு கப்பலும் இலங்கைக்கு செல்லாமல் இந்தியாவுக்கு நேரடியாக வரலாம்.
விழிஞ்சம் துறைமுகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அதானி குழு அதிகாரிகள் கூறியதாவது: அதானி குழுமத்துக்கு, இந்தியாவில் 10 சிறு துறைமுகங்கள் உள்பட மொத்தம் 15 துறைமுகங்கள் உள்ளன. இதில், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகம், பல்வேறு அம்சங்களுடன் விளங்குகிறது. குறிப்பாக, இந்தியாவிலேயே, 23 மீட்டர் வரை இயற்கையான ஆழம் கொண்ட ஆழ்கடல், தானியங்கி கொள்கலன் துறைமுகமாக அமைந்துள்ளது. பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம் என்ற பெருமை பெற்றுள்ளது. இது சென்னை ஐ.ஐ.டி., இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன தானியங்கி கப்பல்- ஷோர் கிரேன்கள், தானியங்கி யார்டு கிரேன்கள் மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக இயங்கும் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை கொண்டுள்ளது.
முதல் கட்டமாக ஆண்டுதோறும் 15 லட்சம் சரக்கு கன்டெய்னர்கள் கையாள இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் அடுத்தடுத்த விரிவாக்க பணிகள் முடியும் போது, இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியா வெளிநாட்டு துறைமுகங்களை சார்ந்திருப்பதை குறைந்து, அன்னிய செலாவணியை அதிகரிக்க வழிவகை செய்யும். இதுவரையில், 415 கன்டெய்னர் சரக்கு கப்பல்கள் கையாளப்பட்டு, மொத்தம் 9.03 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்பட்டுள்ளன.
மொத்தம் நான்கு கட்டங்களாக, இந்த துறைமுகத்தில் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு, பிரமாண்டமாக மேம்படுத்த உள்ளது. 2வது கட்டமாக, ரூ.12,000 கோடியில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளை, ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. இதில், தற்போதுள்ள 800 மீட்டர் கொண்ட கன்டெய்னர் கப்பல்களை கையாளும் பர்த் 2,000 மீட்டராக அதிகரிக்கப்படும். இதுதவிர, இதர உள்கட்டமைப்புகளும், அதிநவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படும். இந்த விரிவாக்க பணிகள் 2028ல் முடிக்க உள்ளோம்.
இதனால், ஆண்டுதோறும் சரக்கு கன்டெய்னர்கள் கையாளும் எண்ணிக்கை 15 லட்சத்தில் இருந்து 45 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். 2000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற முடியும். இதேபோல், 2045க்குள் மூன்று மற்றும் நான்காம் கட்ட விரிவாக்க பணிகளை மேற்கொள்ள தொலைநோக்கு திட்டங்களாக வகுத்துள்ளோம். இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா 10லட்சம் கோடி டாலர் என்ற மிகப் பெரிய பொருளாதார இலக்கை எட்ட விழிஞ்சம் துறைமுகம் தனது பங்களிப்பை வழங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சர்வதேச சரக்கு போக்குவரத்தின் மையம்
விழிஞ்சம் துறைமுகம் எளிதாக ரயில் மற்றும் சாலை நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு துறைமுகமாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை இந்த துறைமுகத்திலிருந்து 2 கி.மீ., தொலைவில் தான் இருக்கிறது. இது தமிழ்நாட்டை இணைக்கும் ஒரு சாலை. அதேபோன்று இருந்து 12 கி.மீ., தொலைவிற்கு உள்ளேயே ரயில் நிலையம் இருக்கிறது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து 16 கி.மீ., தொலைவில் இருப்பதால் சர்வதேச சரக்கு போக்குவரத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாக இது மாறி இருக்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உதவும்
தமிழக எல்லை அருகே விழிஞ்சம் துறைமுகம் இருப்பதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து உற்பத்தியாகும் பொருட்கள் எளிதாக கொண்டு செல்லப்பட்டு இந்த துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யலாம். கேரளாவை பொறுத்தவரை பெரிய அளவிலான இடத்தை தேர்வு செய்வதில் இயற்கையாகவே சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏராளமான தொழிற்பேட்டைகள் உருவானால் ஏற்றுமதி செய்வது எளிதாகும். இதை பயன்படுத்தி தமிழக அரசு தற்போது தென்மாவட்டங்களில் உள்ள காலி நிலங்களில் தொழிற்பேட்டைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.