Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏதாவது காரணம் காட்டி பத்திரப்பதிவை நிறுத்தக்கூடாது கோர்ட் தடை விதித்த ஆவணங்களை மட்டுமே பதிவு செய்யக்கூடாது: பதிவுத்துறை சுற்றறிக்கை

சென்னை: நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டால் மட்டுமே அந்த ஆவணத்தை பதிவு செய்யக் கூடாது என்றும் இவை தவிர ஏதாவது காரணம்காட்டி ஆவணத்தை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பக் கூடாது எனவும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில், உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல், பெரும்பாலான சார்- பதிவாளர்கள் செயல்படுவதாக புகார்கள் வருகின்றன. சொத்துகள் பரிமாற்றம் செய்ய ஆட்சேபம் தெரிவித்து யாராவது மனு கொடுத்தால், அதை ஏற்று பதிவுக்கு வரும் பத்திரத்தை நிராகரிக்க கூடாது.

மனுவில் சான்று ஆவணங்கள் முழுமையாக உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். தடை மனு கொடுப்பவருக்கு குறிப்பிட்ட சொத்தில் உரிமை கோரவும், ஆட்சேபம் தெரிவிக்கவும், சட்டப்பூர்வ ஆதாரம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். உரிய திருப்தி ஏற்படாத நிலையில் பத்திரங்களை நிராகரிக்க கூடாது. சொத்தின் மதிப்பு குறைவாக குறிப்பிடப்பட்டு இருந்தால் உரிய விசாரணை நடத்தி, 47-ஏ விதிப்படி மேல்முறையீட்டு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதைத்தவிர்த்து வழிகாட்டி மதிப்பை விட குறைவான மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி, பத்திரத்தை நிராகரிக்க கூடாது. கடனில் மூழ்கிய சொத்துக்களை கடனீட்டு சட்டத்தின்படி வங்கிகள் ஏலம் விடுகின்றன.

இதை ஏலத்தின் எடுப்பவருக்கு விற்பனை சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுபோன்ற விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்ய மறுக்கக் கூடாது. பதிய மறுப்பதாக புகார் வந்தால், சார்- பதிவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் பதிவு அலுவலர்கள் சிட்டா, அடங்கல், வாடகை மதிப்பு சான்றிதழ், வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது, இந்த ஆவணங்கள் இல்லாததை காரணம் காட்டி பத்திரப்பதிவை நிறுத்தி வைக்கவும் கூடாது. விவசாய நிலங்களை மனைப்பிரிவாக பதிவு செய்யக்கூடாது.

ஆனால் குறைந்த பரப்பளவு விவசாய நிலங்களை விவசாய நிலமாக விற்க, வாங்க தடை இல்லை. சாலையை ஒட்டியுள்ளது என்று கூறி குறைந்த பரப்பளவில் கைமாறும் விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுக்கக் கூடாது. குறிப்பிட்ட சொத்து தொடர்பாக எந்த ஆவணத்தையும் பதிவு செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டால் மட்டுமே அந்த ஆவணத்தை பதிவு செய்யக் கூடாது. இவை தவிர ஏதாவது காரணம்காட்டி ஆவணத்தை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பக் கூடாது. மேற்கண்ட இந்த வழிகாட்டுதல்களை சார்-பதிவாளர்கள் முறையாக செயல்படுவதை, மாவட்ட பதிவாளர்கள், துணைப் பதிவுத்துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.