கடன் சுமை மற்றும் மனஉளைச்சல் காரணமாக போரூர் ஏரியில் குதித்து வணிக வரித்துறை துணை ஆணையர் தற்கொலை: போலீசார் விசாரணை
சென்னை: சென்னை போரூர் அம்பாள் நகர், ரோஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் வேல்(53). இவரது மனைவி கோமளா (42). செந்தில்வேல் செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு வணிக வரித்துறையில் துணை ஆணையராக பணிபுரிந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை வீட்டில் இருந்து அருகிலுள்ள பூங்காவிற்கு நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. செல்போனையும் வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. மேலும் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து குடும்பத்தினர் பல இடங்களிலும் விசாரித்துள்ளனர். இதையடுத்து செந்தில்வேலை காணவில்லை என்று போரூர் காவல் நிலையத்தில் அவரது மனைவி கோமளா புகார் அளித்தார். இதுகுறித்து போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
நேற்று காலை போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாணையில் அது செந்தில்வேல் உடல் என்பது தெரிந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு போரூர் ஏரியில் வீசப்பட்டாரா அல்லது பணி சுமை அல்லது கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போரூர் போலீசார் விசாரித்தனர்.
செந்தில்வேல் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவூர் மூன்றாம் கட்டளை பகுதியில் புதிதாக கட்டிய வீட்டை வாங்கி உள்ளார். அதற்கு போதிய பணம் இல்லாததால் தனியார் வங்கி மற்றும் வெளி நபர்களிடம் நிறைய கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
மேலும் வேலைக்கு சென்று வரும் தூரம் அதிகமாக இருப்பதால் தனக்கு மன உளைச்சல் அதிகமாக இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் அவ்வப்போது அவர் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் அவர் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். கடன் பிரச்சனை மற்றும் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர் போரூர் ஏரியில் குறித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.