அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவி தேர்வர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அரசு உதவி வழக்கு நடத்துநர்(கிரேடு 2) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
சரிபார்ப்பிற்குப் பின்னர் சில சான்றிதழ்கள் ஆவணங்கள் முழுமையாக சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் குறைபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இத்தகைய தேர்வர்கள் வருகிற 16ம் தேதி வரை(இரவு 11.59 மணிக்குள்) விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை ஆவணங்களைப் பதிவேற்றம், மீள் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேற்படி தேர்வர்களின் பதிவெண்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான குறிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை ஆவணங்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிகிறார்கள். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில், அத்தகைய தேர்வர்களின் உரிமை கோரல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.