விஷக் காளான் விருந்து வைத்து மாமனார், மாமியார், உறவினரை கொன்ற மருமகள் குற்றவாளி: ஆஸ்திரேலியா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சிட்னி: விஷக் காளான் விருந்து வைத்து மாமனார், மாமியார், உறவினரை கொன்ற மருமகளை குற்றவாளி என்று ஆஸ்திரேலியா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 29 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த எரின் பேட்டர்சன் என்ற பெண், தனது கணவரின் குடும்பத்தினருக்கு வீட்டில் விருந்தளித்துள்ளார். அந்த விருந்தில், விஷத்தன்மை கொண்ட கொடிய ‘அமானிட்டா’ வகைக் காளான்களை உணவில் கலந்து கொடுத்துள்ளார். இந்த உணவைச் சாப்பிட்ட அவரது மாமனார் டான் பேட்டர்சன், மாமியார் கெய்ல் பேட்டர்சன் மற்றும் உறவினர் ஹீதர் வில்கின்சன் ஆகியோர் உயிரிழந்தனர். வில்கின்சன் என்ற மற்றொரு உறவினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்விவகாரம் ெதாடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனையில் இறந்தவர்களின் உடலில் ‘அமாடாக்சின்’ என்ற கொடிய விஷம் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசாரின் தொடர் விசாரணையில், எரின் பேட்டர்சன் தனது குடும்பத்தினருக்கு ‘அமானிட்டா’ வகைக் காளான்களை உணவில் கலந்து கொடுத்து கொன்றது உறுதியானது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ‘மஷ்ரூம் மர்டர்’ வழக்கில், 11 வாரங்கள் நடந்த நீண்ட விசாரணைக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. நீதிமன்ற விசாரணையின் போது எரின் பேட்டர்சன் அளித்த வாக்குமூலத்தில், ‘நான் வேண்டுமென்றே ெகாலை செய்யவில்லை; அப்போது நடந்தது ஒரு விபத்து’ என்று கூறி வாதிட்டார். ஆரம்பகட்ட விசாரணையில் அவர், உணவில் விஷக் காளான் கலந்ததை மறைக்கவும் முயற்சி செய்தார்.
ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், இது திட்டமிட்ட கொலை என்பதை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், எரின் பேட்டர்சன் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடும்பத்தினருக்கு விருந்து என்ற பெயரில் நடந்த இந்தக் கொடூரக் கொலை, ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


