Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேற்கு வங்கம், வங்கதேசத்தில் கடும் சேதம் ரெமல் புயலுக்கு 16 பேர் பலி: கொல்கத்தாவில் கனமழை கொட்டியது

கொல்கத்தா: மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடந்த ரெமல் புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து கடும் சேதம் ஏற்பட்டது. புயல் பாதிப்பால் மொத்தம் 16பேர் பலியாகி உள்ளனர். கொல்கத்தாவில் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாகின. வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும், வங்கதேசத்தின் கேபுபாராவுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கியது. இந்த புயல் கரையை கடந்து முடிக்க சுமார் 5 மணி நேரம் ஆனது.

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் வங்கதேசத்தின் மோங்லா மற்றும் கேனிங் இடையே படிப்படியாக வலுவிழந்தது. புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக 135 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் கரையோர பகுதியில் இருந்து 1 லட்சம் பேரும் வங்கதேசத்தில் 8 லட்சம் பேரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

ரெமல் புயலால் மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளனர். கொல்கத்தாவில் உள்ள என்டலியின் பிபிர் பாகன் பகுதியில் இடைவிடாத மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 2 பெண்களும், வடக்கு 24 பர்கனாசின் பனிஹட்டி பகுதியில் ஒருவரும், புர்பா மெதினிபூரில் தந்தை, மகன் என மேற்கு வங்கத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். வங்கதேசத்தில் பரிசால், போலா, பதாகலி, சத்கிரா, சட்டோகிராம் ஆகிய கடலோர பகுதிகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தில் பெரும்பாலான கடலோர பகுதிகளில் கடும் சூறாவளியால் மரங்கள் வேரோடு முறிந்தும், மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 1.5 கோடி பேர் இருளில் மூழ்கினர். புயல் முற்றிலும் வலுவிழந்த பிறகு நேற்று பிற்பகலுக்குப் பிறகு மின்சாரம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா மெதினிபூர் மாவட்டங்களில் மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. சுந்தர்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ராட்சத அலைகள் எழுந்தன.

கொல்கத்தா, நாடியா மற்றும் முர்ஷிதாபாத் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று காலை வரை பலத்த காற்றுடன் கனமழை நீடித்தது. இதனால் கொல்கத்தாவில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகின. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மேற்கு வங்கத்தில் புயல் மீட்பு பணிகள் மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 14 குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். ரெமல் புயலால் மேற்கு வங்கத்தில் 30,000 வீடுகள் சேதமடைந்ததாகவும், 2,140 மரங்கள் விழுந்துள்ளதாகவும், 317 மின் கம்பங்கள் சரிந்திருப்பதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

*பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வேன்

புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலரிடம் போனில் பேசி தகவல்களை கேட்டறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘‘நேற்று முன்தினம் முதல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ரெமல் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பலரது குடிசை, மண் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பயிர்கள் சேதமடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வேண்டிய உதவிகளை செய்வோம். விரைவில் புயல் பாதிப்புகளுக்கு நேரில் சென்று பார்வையிடுவேன்’’ என்றார்.

* கொல்கத்தா ஏர்போர்ட் மீண்டும் திறப்பு

ரெமல் புயல் காரணமாக கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் 21 மணி நேரம் மூடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை 9 மணி முதல் விமான நிலையம் செயல்படத் தொடங்கியது. விமான சேவை தொடங்கப்பட்டாலும் வழக்கமான செயல்பாட்டிற்கு வர சில மணி நேரங்களாகும் என விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) தெரிவித்துள்ளது. இதே போல ரயில் சேவையும் படிப்படியாக சீரானது.