Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்பு; மின்சாரம் வழங்கும் பணியில் 900 பேர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்: ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்படைந்து மின்சாரம் இன்றி பல பகுதிகள், பல கிராமங்கள், பேரூராட்சிகள் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கான 900 பேர் அந்த பணியில் இன்றைக்கு மின்வாரிய துறையின் சார்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். உத்தேசமான கணக்கெடுப்பின்படி, 1,29,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு, தேங்கியுள்ள நீர் வடிந்தபின் முறையான, முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் இன்றைக்கு திமுக எம்பிக்கள் புயல் பாதிப்பை பற்றி பேசவிடவில்லையே.

அப்படி இருக்கும்போது நம்முடைய கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளுமா? பேச விடவில்லை. முறைப்படி இது எங்களுடைய கடமை. எவ்வளவு சேதாரம் ஏற்பட்டிருக்கிறது; மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயத்தை பொறுத்தவரையில் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இவற்றையெல்லாம் கணக்கெடுத்து அனுப்புவது எங்களுடைய கடமை. அதை செய்வது அவர்களுடைய கடமை. ஆனால், அதை செய்ய ஒவ்வொரு முறையும் மறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும், அதையும் மீறி நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். பார்ப்போம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். நாங்கள் எல்லாம் எங்கள் ஆட்சியில் பயிர்களுக்கெல்லாம் வருடத்திற்கு இரட்டை இழப்பீடு கொடுத்தோம்.

ஆனால், திமுக அரசு காலம் தாழ்த்தி வழங்குகிறது என்று கூறுகிறாரே? அவர் எதிர்க்கட்சி தலைவர், குற்றம் சொல்வதுதான் அவருடைய கடமை. அதைப்பற்றி நாங்கள் என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. இருந்தாலும் நான் சொல்கிறேன். மக்களுக்கு தெளிவாக தெரியும். எந்த ஆட்சியில் மக்களுக்குரிய பணிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று நன்றாக தெரியும். திருவண்ணமலையில் மண் சரிவு காரணமாக 3 வீட்டில் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறதா? மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரிடம் பேசிக் கொண்டுதான் வருகிறேன். ஐஐடி-லிருந்து சில பொறியாளர்களை வரவழைத்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

அடுத்த மாவட்டத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புள்ளதா? தேவையில்லை. அங்கெல்லாம் மழை பெய்து பாதிப்பு அதிகம் இல்லை. விழுப்புரம், கடலூர், சென்னை, சென்னையை ஒட்டியுள்ள சில இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இப்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது என்ற தகவல் வந்தது. உடனடியாக துணை முதல்வருக்கு தொலைபேசியில் பேசி அவரை உடனடியாக போகச் சொல்லியிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், பொறுப்பு அமைச்சர்கள் அருகிலுள்ள மாவட்ட அமைச்சர்களையும் உடனடியாக அங்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள சொல்லியிருக்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.