Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூரில் ரயில் மோதி 3 மாணவர்கள் பலி கேட்டை மூடாமலே மூடியதாக தகவல் சொன்ன கேட் கீப்பர்: புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்

சிதம்பரம்: கடலூரில் ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், கேட் கீப்பர் கேட்டை மூடாமலே மூடியதாக தகவல் சொன்னது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர் செம்மங்குப்பத்தில் கடந்த 8ம் தேதி பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து புலன் விசாரணை குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்தின் முதல் ஆதாரமாக ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர் ஆகியோர் சம்பவத்தின்போது நடத்திய வாய்ஸ் ரெக்கார்டர் பரிசோதிக்கப்பட்டது.

இதில் செம்மங்குப்பம் ரயில்வே கிராசிங் கேட் திறந்து இருந்ததற்கான ஆதாரங்களை இக்குழுவினர் கண்டறிந்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல் திறந்து வைத்திருந்தது புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.  அதாவது, ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஸ்டேஷன் மாஸ்டருக்கு கொடுத்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, விபத்துக்குபின் ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என தெரிவித்தது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மூடியிருந்த கேட்டை பள்ளி வேன் டிரைவர் திறக்க சொன்னதாக பங்கஜ் சர்மா முதலில் கூறியிருந்த நிலையில், புலன் விசாரணையில் கேட் கீப்பர் பொய் சொல்லியிருப்பதும், அவரது அலட்சியமே இந்த கோர ரயில் விபத்துக்கு காரணம் என்பதும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடலூர் ரயில் விபத்து தொடர்பாக முதுநகர் ரயில் நிலை மேலாளர் அசோக்குமார் ஜோவோ, விபத்து நடந்த ரயிலின் கார்டு விக்ராந்த் சிங் மற்றும் ரயில் இன்ஜின் டிரைவர், உதவி டிரைவர் உள்ளிட்ட 4 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் மூலம் சிதம்பரம் ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன்படி நேற்று காலை 4 பேரும் சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களை ரயில் நிலைய ஓய்வறைக்கு அழைத்துச் சென்ற ரயில்வே போலீசார், கதவுகள் அனைத்தும் மூடிய நிலையில் 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் ரயில் விபத்து குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்களின் வாக்குமூலத்தை சேகரித்ததாக தெரிகிறது.