Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.15 கோடியில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

கடலூர்: கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.15 கோடியில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். கடலூரில் நேற்று கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.23.93 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், விருத்தாசலம் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மேல்புவனகிரி, கம்மாபுரம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றிற்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 12,100 பயனாளிகளுக்கு, ரூ.80 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான வீரர்கள் வீராங்கனைகள் உருவாகி இருக்கிறார்கள். இந்த மேடையில் சர்வதேச கால்பந்து போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று பதக்கங்களை வென்று வந்துள்ள தங்கைகள் சந்தியா, கார்த்திகா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விருதாச்சலத்தில் உள்ள மினி ஸ்டேடியத்தை மேம்படுத்த ரூ.18 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடலூரில் அண்ணாவால் 1968ல் அடிக்கல் நாட்டப்பட்டு, கலைஞரால் 1975ல் திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானம் விரைவில் பொன்விழா காண உள்ளது.

பல சர்வதேச, தேசிய வீரர்களை உருவாக்கிய இந்த மைதானத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்படும் என்று அறிவிப்பை முதல்வர் அனுமதியோடு, உங்கள் கோரிக்கையை ஏற்று இங்கே அறிவிக்கின்றேன் என்று தெரிவித்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கணேசன், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் எம்பி விஷ்ணுபிரசாத், எம்எல்ஏக்கள் ஐயப்பன், சபா ராஜேந்திரன், ராதா கிருஷ்ணன், சிந்தனைச் செல்வன், மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புயல்வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னையில் அவசர ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இந்த கூட்டத்தை ரத்து செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை 4 மணியளவில் கடலூரில் இருந்து சென்னை புறப்பட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மழையை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம். இயற்கையை கட்டாயம் சமாளிப்போம். மழை அதிகமாக வரவுள்ள மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் தயார் நிலையில் உள்ளனர்’ என்றார். அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் நடந்த மோதல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, எங்களது நிகழ்ச்சியில் பிசியாக இருக்கிறேன், அதிமுக மோதல் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

* காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

கடலூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதுநகர் காவல் நிலையத்துக்கு நேற்று திடீரென சென்று ஆய்வு செய்தார். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் பரபரப்படைந்தனர். காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரம், நிலைய எழுத்தர் அறை, பதிவேடுகள், ஆண், பெண் கைதிகள் அறை, அடிப்படை வசதிகள், சிசிடிவி செயல்பாடு குறித்து துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். காவலர்களின் பணி மக்கள் பாதுகாப்பு மற்றும் சேவைக்கான பணி என்ற நிலைப்பாட்டை உணர்ந்து அனைவரும் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.