கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவ, மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்: துணை முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
சென்னை: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்
துணைமுதலமைச்சர் இரங்கல்,
ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது. இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுமாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.
சு.வெங்கடேசன், எம்.பி இரங்கல்
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது என சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல் தெரிவித்துள்ளார் . மன்னிக்கவே முடியாத அலட்சியத்தால் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ரயில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி இரங்கல்.
கடலூர் அருகே ரயில் மோதி 3 மாணவ - மாணவிகள் உயிரிழந்ததும், பலர் படுகாயம் அடைந்ததும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார். காலையில் கண்விழித்து உற்சாகமாக பள்ளிக் கூடங்களுக்கு புறப்பட்டுச் சென்ற அந்த பிள்ளைகள் கொடூரமாக உயிரிழந்த சோகத்தை எளிதில் கடந்து போக முடியவில்லை. இப்படிப்பட்ட விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் பொறுப்பு ரயில்வே துறைக்கு உண்டு. தவறு செய்த அதிகாரிகளும், ஊழியர்களும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


