கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு; 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!
கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது அவ்வழியாக வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் சின்ன காட்டுசாகையைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி சாருமதி, அவரது தம்பியும், 10ம் வகுப்பு மாணவனுமான செழியன் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மாணவனான தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவனான விமலேஷும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளிக்கு சென்ற பிள்ளைகள் சடலமாக கிடந்ததை கண்டு ஒட்டுமொத்த கிராம மக்களே கண்ணீர் கடலில் மூழ்கியது. விபத்தில் காயமடைந்த விஸ்வேஷ், பள்ளி ஓட்டுநர் சங்கர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை உடனடியாக ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து சிதம்பரம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது 7.05 மணிக்கு ரயில்வே கேட்டை மூடியதாகவும், 7.25 வரை கேட் மூடப்பட்டதே இருந்ததால் அதிக வாகனம் காத்திருக்க நேரிட்டதாகவும் அதனால் மீண்டும் கேட்டை திறந்து விட்டதாகவும் பங்கஜ் குமார் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், வருகிற 22 ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.