Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றியுடன் வெளியேறிய ராஜஸ்தான்; அடுத்த சீசனில் சிறப்பாக திரும்பி வருவோம்: கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி

புதுடெல்லி: 18வது சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு நடந்த 62வது லீக்போட்டியில் கடைசி 2 இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 43, டெவால்ட் பிரெவிஸ் 42, சிவம் துபே 39 ரன் அடித்தனர். ராஜஸ்தான் பவுலிங்கில் ஆகாஷ் மத்வால், யுத்வீர் சிங் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 188 ரன் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஸ்வால் 19 பந்தில் 36ரன் எடுத்து வெளியேற மற்றொரு தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 33 பந்தில் 57ரன் விளாசி அவுட் ஆனார். கேப்டன் சஞ்சு சாம்சன் 41, துருவ் ஜூரல் நாட் அவுட்டாக 31ரன் அடித்தனர். 17.1ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன் எடுத்த ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார். 14வது போட்டியில் 4 வெற்றி, 10 தோல்வி என 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் சீசனை நிறைவு செய்து 9வது இடத்துடன் வெளியேறியது. நடப்பு சீசனில் ஏற்கனவே மார்ச் 30ம்தேதி கவுகாத்தியில் மோதிய போட்டியில் ராஜஸ்தான் வென்ற நிலையில் நேற்றும் சிஎஸ்கேவை வீழ்த்தியது. வெற்றிக்கு பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், வெற்றி பெற்றது நன்றாக உள்ளது.

உண்மையைச் சொல்லப் போனால், முதலில் பேட் செய்து ஸ்கோர் அமைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த ஆட்டத்தில் எந்த மறைவும் இல்லை என்று உணர்ந்தேன், சேசிங் சவாலை எதிர்கொள்ள முடிவு செய்தேன். எங்களிடம் மிகவும் இளம் பந்துவீச்சு வரிசை உள்ளது. ஆர்ச்சர், சந்தீப் சர்மாவை இழந்தாலும் இளம் பந்துவீச்சாளர்கள் காட்டிய மனநிலை மற்றும் திட்டமிடல் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சி குழுவினர் அவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர்.

இந்த சீசனில் நாங்கள் சில தவறுகளைச் செய்துள்ளோம். அடுத்த சீசனில் சிறந்த மனநிலையுடன் நாம் திரும்பி வர வேண்டும். சூர்யவன்ஷி பற்றி பேச எனக்கு வார்த்தைகள் இல்லை. அவர் அடித்த சதம் மிகவும் அருமை.  இளம் வயதிலேயே அவருக்கு விளையாட்டு விழிப்புணர்வு இருப்பது பாராட்டத்தக்கது, என்றார்.

இளைஞர்களுக்கு எனது அறிவுரை...

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் டோனி கூறுகையில், நாங்கள் பேட்டிங்கில் நிர்ணயித்த இலக்கு ஒரு நல்ல ஸ்கோராக நான் நினைக்கிறேன். ஏனென்றால் விக்கெட்டுகளை அதிக அளவு இழந்ததால் கீழ் வரிசை வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பிரவீஸ் அபாரமாக விளையாடி சரியான வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை சேர்த்தார். ரன் ரேட்டும் நன்றாக தான் இருந்தது. பவர் பிளேவில் அதிக விக்கெட் இழந்ததால் ரிஸ்க் எடுத்து ஆட முடியவில்லை. கம்போஜ் பந்துவீச்சில் ஸ்விங் செய்வது கிடையாது. நல்ல யாக்கர் பந்துகளை வீசுகிறார். பவர் பிளேவில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருகிறோம். முதல் 6 ஓவரில் இவ்வளவு அதிக ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடாது பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். விளையாட்டை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் என்னுடைய அறிவுரையாக இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன், என்றார்.

பிட்ஸ்.. பிட்ஸ்..

* ஐபிஎல் வரலாற்றில் ஒருசீசனில் 2வது முறையாக சிஎஸ்கே 10 தோல்விகளை சந்தித்துள்ளது. இதற்கு முன் 2022ல் 10 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது.

* ராஜஸ்தான், நடப்பு சீசனில் சேசிங்கில் 10 போட்டியில் 2 வெற்றி(குஜராத், சிஎஸ்கேவுக்கு எதிராக), 7 தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லியுடன் டையில் முடிந்த போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது.

* ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் முதன்முறையாக ஒரு சீசனில் 10 தோல்வியை சந்தித்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் 3 சீசனில் 10 பிளஸ் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

* நடப்பு சீசனில் அஸ்வின் மொத்தம் 7 விக்கெட் தான் எடுத்துள்ளார். இதற்கு முன் 2009ல் அவர் 2 விக்கெட் தான் எடுத்திருந்தார்.