Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10 ஆண்டு சாதனை 5 ஆண்டுகளில் முறியடிப்பு; வெளிநாட்டில் பதுங்கியிருந்த 134 குற்றவாளிகள் நாடு கடத்தல்: சிபிஐ அதிரடி

புதுடெல்லி: நாட்டிற்குள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்குத் தப்பியோடும் குற்றவாளிகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவது பெரும் சவாலாக இருந்து வந்தது. அந்த வகையில், கடந்த 2010 முதல் 2019ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டு காலகட்டத்தில், தப்பியோடிய குற்றவாளிகளில் 74 பேர் மட்டுமே இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டிருந்தனர். ‘இன்டர்போல்’ மூலம் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ வெளியிடுவது, அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது, சட்ட மற்றும் தூதரக ரீதியான நடைமுறைகளை முடிப்பது என பல கட்டங்களைக் கொண்ட இந்த நடவடிக்கையானது, அதிகக் காலம் எடுத்துக்கொண்டதால் குற்றவாளிகளை நாடு கடத்துவதில் மந்தநிலை காணப்பட்டது.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சிபிஐ, இன்டர்போல் மற்றும் பிற நாடுகளின் சட்ட அமைப்புகளுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டதன் விளைவாக, 2020ம் ஆண்டிலிருந்து இதுவரை 134 குற்றவாளிகள் வெற்றிகரமாக இந்தியாவிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு மட்டும் 23 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் மேம்படுத்தப்பட்ட தூதரக உறவுகள், உயர் மட்டத் தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியது, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. மேலும், ‘ரெட் நோட்டீஸ்’ வெளியிடுவதில் ஏற்படும் கால தாமதத்தைக் குறைக்க, சிபிஐ ‘பாரத்போல்’ என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குற்றவாளிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை மேலும் வேகப்படுத்தியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.