கோவை: கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.9 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2 மாதத்துக்கு முன் மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த மேம்பாலத்தில் கரும்புக்கடை பகுதியில் உள்ள ஒரு தூண் விரிசல் விட்டிருப்பதாக தகவல் வந்தது. மேம்பால விரிசலால் ஆபத்து என சிலர் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டனர். இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி பொறியாளர் மார்ட்டின் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘மேம்பாலத்தின் இரு தூண்களுக்கு இடையே 40 மி.மீ அளவிற்கு இடைவெளி விட்டு தான் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. வாகனங்கள் சென்று வரும் போதும், வெப்பம் காரணமாகவும் கான்கிரீட் இலகு தன்மைக்காக இந்த இடைவெளி விடப்படுகிறது.
இது வழக்கமான ஒன்று தான். மேம்பால பணி முடிந்து சிமெண்ட் பூச்சு பூசும் போது இடைவெளி பகுதியையும் சேர்த்து பூசியிருக்கிறார்கள். வாகனங்கள் சென்று வந்த போது இடைவெளியில் இருந்த சிமெண்ட் பூச்சு விழுந்து விட்டது. இதனால், பாலத்தில் விரிசல், பாதிப்பு என தகவல் பரப்பி விட்டார்கள். பாலம் நல்ல முறையில் பலமாக தான் இருக்கிறது. தூண்களும் நல்ல நிலைமையில் தான் இருக்கிறது. பாலத்தின் ‘டெஸ்க்’ பகுதியும் பலமாக இருக்கிறது. பாலத்தின் ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கு இடையே சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கிறது. இந்த இடை வெளியை வைத்து சிலர் விரிசல் என வதந்தி பரப்புகிறார்கள். வாகனங்களில் எந்த வித அச்சமும் இன்றி பாலத்தின் வழியாக சென்று வரலாம்’’ என்றனர்.


