சென்னை: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த எங்களை ஆணவக்கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று காதல் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தை சேர்ந்த கிருபா சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த ஜூன் 16ம் தேதி எங்கள் ஊரை சேர்நத் ராஜ்கிஷோர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் வீட்டில் எதிர்ப்பு அதிகமாக இருந்தது. இதனால் நானும் கணவரும் விழுப்புரம் மாவட்டம் காணை காவல் நியைத்தில் பாதுகாப்பு கேட்டு ஆஜராகினோம். காவல் அதிகாரிகள் என் வீட்டாரையும் எனது கணவர் வீட்டாரையும் அழைத்து விசாரித்தார்கள். நான் மேஜர் என்பதால் என் விருப்பப்படி எனது கணவருடன் என்னை போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு வாலிகண்டபுரத்தில் சிறுபான்மையான எனது கணவரின் தந்தை சுப்பிரமணியிடம் எனது உறவினர்கள் பாலு, ராயல் ராமசாமி ஆகியோர் அடிக்கடி போன் செய்து, ‘என் பையனுக்கு எங்கள் வீட்டுல பெண்ணை தூக்குற அளவுக்கு தைரியம் வந்துருக்கா, என்னைக்கு இருந்தாலும் உன் பையன் எங்க பசங்க பைக்கை விட்டு தூக்கிடுவானுங்க’ என மிரட்டுகின்றனர். எனது கணவரின் தந்தை மற்றும் தாயாரை எனது உறவினர்கள் வீடு புகுந்து அடித்து மண்டையை உடைத்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கும் எனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு அளித்தும், மேற்கூறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.