Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய உயிரிழப்பு விவகாரம் சாராய வியாபாரிகளுடன் தொடர்பா? 2 எஸ்ஐ, 34 போலீசார் அதிரடி மாற்றம்: காவல்நிலையத்தில் பணியாற்றிய 42 பேரும் இடமாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சாராய வியாபாரிகளுடன் போலீசார் நேரடி தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவில் இருந்த 2 எஸ்ஐ, 34 போலீசார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். காவல் நிலையங்களில் பணியாற்றிய 42 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டு 65 பேர் உயிரிழந்தனர். இதுவரை 157 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 7 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் எஸ்பி சமய்சிங் மீனா உள்ளிட்ட 9 காவலர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு கடந்த 19ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. மெத்தனால் கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான புதுவை மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 22 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் 11 பேரை சிபிசிஐடி போலீசார் 3 நாள் காவலில் எடுத்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அதில் சாராய வியாபாரிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளூர் காவலர்கள் முதல் வெளியூர் காவலர்கள் வரை யார்? யார்? தொடர்பில் இருந்தனர் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. குறிப்பாக சாராய வியாபாரிகள் கருணாபுரம் கண்ணுக்குட்டி, இவரது தம்பி தாமோதரன், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி ராமர், சேஷசமுத்திரம் சின்னதுரை மற்றும் வேலு, கல்வராயன்மலை ஏழுமலை உள்ளிட்ட பலருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சாராய வியாபாரிகளின் செல்போன் நம்பர் மூலம் ரகசியமாக சேகரிக்கப்பட்டுள்ளன.

அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மற்றும் மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை, தனிப்பிரிவு காவலர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 34 காவலர்கள் மற்றும் 2 எஸ்ஐகள் என 36 பேர் கூண்டோடு காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 3 காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 3 எஸ்ஐகள், மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 39 காவலர்கள் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார். மேலும் மெத்தனால் கலந்த விஷ சாராய விவகாரத்தில் முன்னரே கண்டறிந்து தடுக்க தவறியதாக கருதியும் அலட்சியமாக செயல்பட்டதாக கூறியும் சில காவல்துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு பெயர் பட்டியல் சென்றுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.