அடுத்த வாரம் பணிகள் தொடக்கம்; 15 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்
புதுடெல்லி: வாக்காளர் அட்டை சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியின் முதற்கட்டத்தில் தமிழ்நாடு உட்பட 10 அல்லது 15 மாநிலங்கள் இடம் பெறலாம் என்றும் இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறி உள்ளனர். பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் எஸ்ஐஆரின் முதல்கட்டம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுடன் மேலும் சில மாநிலங்கள் சேர்த்து 10 அல்லது 15 மாநிலங்கள் இடம் பெறலாம் என தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாநிலங்கள் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்தகட்டமாக எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நடக்கும் மாநிலங்கள் எவை, எவை என்கிற விவரங்களை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
