குய்டோ: கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில், பிரேசில் அணி 5 கோலடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து போட்டி, ஈகுவடார் நாட்டின் குய்டோ நகரில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில், கொலம்பியா அணிகள் மோதின. துவக்கம் முதல் இரு அணிகளை சேர்ந்த வீராங்கனைகளும் சூறாவளியாய் சுழன்று கோலடிப்பதில் தீவிரம் காட்டினர். போட்டியின் முதல் கோலை கொலம்பியா வீராங்கனை லிண்டா கெய்சிடோ, 25வது நிமிடத்தில் போட்டார். பின், 45+9வது நிமிடத்தில் பிரேசில் வீராங்கனை ஏஞ்சலினா கோலடித்தார். அதைத் தொடர்ந்து இரு அணி வீராங்கனைகளும் மாறி மாறி கோலடித்து அசத்தினர்.
கொலம்பியாவின் டார்சியானே, மாய்ரா ராமிரெஸ், லெய்ஸி சான்டோஸ் தலா ஒரு கோல் போட்டனர். பிரேசில் அணியின் அமன்டா குடியரெஸ் ஒரு கோலும், மார்தா 2 கோல்களும் போட்டனர். அதனால், இரு அணிகளும் தலா 4 கோல் போட்டு சம நிலையில் இருந்தன. அதையடுத்து, வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில், பிரேசில் வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு 5 கோலடித்தனர். மாறாக, கொலம்பியா வீராங்கனைகளால் 4 கோல் மட்டுமே போட முடிந்தது. அதனால் போட்டியில் வெற்றி பெற்ற பிரேசில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.