Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான அபராத வட்டி உள்ளிட்ட வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை: கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான அபராத வட்டி உள்ளிட்ட வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வீட்டு வசதி செய்து தரப்பட வேண்டுமென்ற நோக்கத்தினை உறுதி செய்யும் வகையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

மொத்தமுள்ள 1,173 வீட்டு வசதி சங்கங்களில், 680 வீட்டு வசதி சங்கங்கள் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் சங்க உறுப்பினர்களின் வீட்டு வசதித் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. வீட்டு வசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க அவ்வப்போது அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம்.

இதன்மூலம் சங்க உறுப்பினர்கள் பயனடைந்து வந்தனர். கடைசியாக 2023 ஆம் ஆண்டு இதுபோன்ற வட்டித் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.இந்தச் சூழ்நிலையில், தற்போது நிலுவையிலுள்ள ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்;

ஆனால் நிலுவைக் கடனை அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளுடன் திருப்பிச் செலுத்த சங்க உறுப்பினர்கள் தயாராக இல்லை என்றும், அனைவரும் அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி உள்ளிட்ட வட்டித் தள்ளுபடி திட்டத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக, நிலுவைத் தொகையை சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்க முடியாத நிலை உள்ளதாகவும், புதிய கடன்கள் வழங்க இயலாத நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, பெரும்பாலான சங்கங்கள் செயல்பட முடியாமல் முடங்கிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்கள் கடன் சுமையிலிருந்து விடுபடவும், சங்கங்களின் செயல்பாடுகள் சீராக இயங்கவும், புதிய கடன் வழங்கவும் வழிவகை செய்யும் வகையில், குறிப்பிட்ட கால அளவிற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் அபராத வட்டி உள்ளிட்ட வட்டித் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று சங்க உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டி தள்ளுபடி திட்டத்தினை அறிவிக்கவும், ஏற்கெனவே நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு பத்திரங்களை விரைந்து வழங்கவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.