குன்னூர் : குன்னூர் அருகே இருசக்கர வாகனங்களை காட்டு மாடு வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ளதால் கரடி, காட்டுமாடு, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. இதில் சில நேரங்களில் பொருட்சேதங்களும், உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக சமீபகாலமாக காட்டுமாடுகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவது சர்வசாதாரணமாக உள்ளது. இந்நிலையில், குன்னூர் அருகே வண்டிச்சோலை பேருந்து நிலையத்தில் நாள்தோறும் உள்ளூர் வாசிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் என பலர் பேருந்துக்காக காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில், நேற்று காட்டெருமை ஒன்று பேருந்து நிலையம் அருகே அடார் எஸ்டேட் செல்லும் சாலையில் உலா வந்தது. தொடர்ந்து, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை வழிமறித்தது. இதனை கண்டு, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யாரையும் தாக்காமல் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அங்கிருந்து சென்றுள்ளது. இதுபோல வனவிலங்குகள் சாலையிலும், பேருந்து நிலையங்களிலும் உலா வருவதால், மனித வனவிலங்கு மோதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வனவிலங்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


