Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குன்னூரில் மது பிரியர்கள் அட்டகாசம்

*மாணவ, மாணவிகள் அவதி

குன்னூர் : குன்னூரில் மது பிரியர்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் கிராஸ்பஜார் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வங்கிகள், வழிபாட்டு தளங்கள் போன்றவைகள் அப்பகுதியில் உள்ளதால் எப்போதும் கிராஸ் பஜார் பகுதி பரபரப்பாகவே காணப்படும்.

இதற்கிடையே மவுண்ட் ரோடு, கிராஸ் பஜார் போன்ற பகுதிகளில் மதுபிரியர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கிராஸ் பஜார் பகுதியில் வரும் மதுபிரியர்கள் மது போதையில் தள்ளாடி கீழே விழுவதும், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இடையூறாக போதையில் நடைப்பாதையில் படுத்து உறங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சஜீவன் கூறுகையில் ‘‘மது போதையால் நடைபெறும் சமூக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொது வெளிகளில் மது அருந்துவதை கட்டுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும்.

இன்றைய நிலையில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறுவர், சிறுமிகள் கூட மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் உடல் உழைப்பில் ஈடுபடும் பல தொழிலாளர்கள் களைப்பைப் போக்கும் மருந்தாக மதுவை பயன்படுத்துகின்றனர்.

காலப்போக்கில் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மதுவுக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, மதுபோதையில் வீதியில் விழுந்து கிடக்கும் நிலை உருவாகிறது.

மேலும் தற்போதைய நிலையில் மது அருந்துவதை அவமானமான செயலாக கருதாமல் கெத்து காட்டும் செயலாக கருதும் போக்கு அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது.

ரகசியமாக மறைந்து மறைந்து குடித்த பலரும் தற்போது சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

இதனால் சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சம் அடைவதுடன் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர்’’ என்றார். எனவே மதுபிரியர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.