அவுரங்கசீப் குறித்த சர்ச்சை பேச்சால் கலவரம்; பற்றி எரிகிறது நாக்பூர்: 4 எப்ஐஆர் பதிவு; 47 பேர் கைது; 20 பேர் படுகாயம்
நாக்பூர்: அவுரங்கசீப் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தால் ஏற்பட்ட வன்முறையால் கல் வீச்சு, தீவைப்பு சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது நாக்பூரில் 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை தேடிதேடி போலீசார் கைது செய்து வருகின்றனர். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ எனும் பெயரில் திரைப்படமாகி உள்ளது. இதுதொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்தது. அப்போது பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, அவுரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க என கோஷமிட்டார். இதனால், மார்ச் 26 வரை பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சர்ச்சைக்கு மத்தியில் ‘சத்ரபதி சம்பாஜி நகரில் இருக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும்’ என்ற வலியுறுத்தல் மீண்டும் எழுந்தது. இதற்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் ஆதரவாகப் பேசினார்.
இச்சூழலில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர், ‘அவுரங்கசீப் சமாதி அகற்றப்படவில்லை என்றால் அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போல் அவுரங்கசீப் சமாதியை அகற்றுவோம்’ என்று தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக விஎச்பி, பஜ்ரங் தளம் சார்பில் நாக்பூர் உட்பட மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அப்போது இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் வெடித்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில் 15 போலீசார் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். கலவரம் தொடர்பாக 4 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 47 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்க நாக்பூரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட விவகாரத்தில் இந்துத்துவா அமைப்புகளுக்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அவுரங்கசீப் சமாதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து நாக்பூரில் பதற்றம் நிலவி வருவதால், அதிகாரபூர்வ மறு உத்தரவு வரும் வரை பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 163-இன் கீழ் நாக்பூர் நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நாக்பூர் காவல்துறை ஆணையர் ரவீந்தர் குமார் சிங்கால் அறிவித்துள்ளார். மேலும் அந்த உத்தரவில், ‘ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் மருத்துவ காரணங்களுக்காகத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது; ஐந்து பேருக்கு மேல் ஒன்றாக கூடக்கூடாது.
வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்க குறிப்பிட்ட சாலைகள் மூட காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் மீது பிரிவு 223-இன் கீழ் கைது செய்யப்படுவார்கள். இந்த உத்தரவானது அரசு ஊழியர்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொருந்தாது’ என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வன்முறையில் ஈடுபட்ட சிலரது பெயர்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவில் சம்பவம் நடந்தது. இரண்டு வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன; கல் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. புனித நூலை ஒரு கும்பல் எரித்துள்ளது. வன்முறையாளர்களை அடையாளம் காண சோதனை நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.