*பொதுமக்கள் மகிழ்ச்சி
ஊட்டி : ஊட்டியில் பெய்த தொடர் மழை காரணமாக ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான மார்லிமந்து அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலை, கீழ் கோடப்பமந்து, மேல் கோடப்பமந்து உள்ளிட்ட அணைகள் விளங்கி வருகின்றன.
இந்த அணைகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சியின் 3,4-வது வார்டுகளை உள்ளடக்கிய வண்டிச்சோலை, சர்ச்ஹில், மார்லிமந்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மார்லிமந்து அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இதேபோல ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களான பார்சன்ஸ் வேலி அணை, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மார்லிமந்து அணையிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 23 அடியில் தற்போது 18 அடி வரை நீர் இருப்பு உள்ளது.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையிலும், அணையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் இருந்து வர கூடிய நீரும் அணையில் சேருவதால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதனால் வண்டிசோலை, சர்ச்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை நீங்கியுள்ளது. இதனிைடயே மழை தொடர உள்ள நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டி விடும். இம்முறை குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்ததால் மார்லிமந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மார்லிமந்து அணையை நம்பியுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு ஏற்படாது, என்றார்.