Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 3 ஆண்டுக்கு பின் துப்பு துலங்கியது சில்லி சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் தராததால் அடித்துக் கொன்றோம்

*கைதான இருவர் திடுக் வாக்குமூலம்

சத்தியமங்கலம் : கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். சில்லிசிக்கன் சாப்பிட்டு விட்டு பணம் தராததால் கல்லால் அடித்து கொன்றதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அடுத்துள்ள வெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தின் அருகே உள்ள குட்டையில் கடந்த 2021ம் ஆண்டு தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட நபர் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரங்கசாமி (56) என தெரியவந்தது. கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (37) தனசேகர் (36) ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனசேகர் என்பவர் புஞ்சை புளியம்பட்டி டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்ததும், பிரகாஷ் என்பவர் பார் அருகே சில்லி சிக்கன் கடை வைத்திருந்ததும் தெரியவந்தது.

கட்டிட தொழிலாளி ரங்கசாமி மது அருந்துவதற்காக டாஸ்மாக் பாருக்கும் அருகே உள்ள சில்லி சிக்கன் கடைக்கும் அடிக்கடி வந்து சென்ற நிலையில், சில்லி சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் தராததால் ஆத்திரமடைந்த பிரகாஷ், தனசேகர் இருவரும் சேர்ந்து கட்டிட தொழிலாளி ரங்கசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, சம்பவத்தன்று மது போதையில் இருந்த ரங்கசாமியை வெங்கநாயக்கன்பாளையம் அருகே உள்ள தண்ணீர் இல்லாத வறண்ட குட்டைக்கு அழைத்து சென்று கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு இருவரும் தப்பி சென்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து இருவரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் கட்டிட தொழிலாளி ரங்கசாமியை அடித்து கொலை செய்த வழக்கில் 3 ஆண்டுக்கு பிறகு தனசேகர், பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.