காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சை கருத்து தெரிவித்த பினராயி விஜயன் மீது விசாரணை
திருவனந்தபுரம்: தனக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை டிஒய்எப்ஐ அமைப்பினர் தாக்கியது உயிர் காக்கும் நடவடிக்கை என்று கூறிய முதல்வர் பினராயி விஜயன் மீது விசாரணை நடத்த எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒவ்வொரு தொகுதியாக மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதற்காக சொகுசு பஸ் வாங்கப்பட்டது.
இந்த பஸ்சில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொரு தொகுதியாக சென்று வந்தனர். இந்நிலையில் அரசுப் பணத்தை வீணடிப்பதாக கூறி பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் செல்லும் வழியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது, இளைஞர் காங்கிரசாரை டிஒய்எப்ஐ அமைப்பினர் கடுமையாக தாக்கினர்.
காங்கிரஸ் தொண்டர்களை டிஒய்எப்ஐ தொண்டர்கள் தாக்கவில்லை என்றும், தாங்கள் வந்த பஸ் அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அவர்களது உயிர்காக்கும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டனர் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இது தொடர்பாக எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் தலைவரான முகம்மது ஷியாஸ், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியதை உயிர் காக்கும் நடவடிக்கை என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியதின் மூலம் குற்ற செயல்களை அவர் ஊக்குவித்துள்ளார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நேற்று பரிசீலித்த நீதிமன்றம், முதல்வர் பினராயி விஜயன் கூறிய கருத்து தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய எர்ணாகுளம் மத்திய போலீசுக்கு உத்தரவிட்டது.


